ஒவ்வொரு ஹீரோவுக்கும் முதல் படம் எப்படியோ? , அதேபோல் 100வது படமும் அப்படியொரு முக்கியத்துவமானதாக இருக்கும். 100 வது படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும். அதற்காக, சிறந்த இயக்குனர், தயாரிப்பு நிறுவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்பது அந்த ஹீரோவின் விருப்பமாக இருக்கும். பல பெரிய ஹீரோக்களின் 100வது படம் பெரிதாக ஹிட்டாகவில்லை. சினிமா சென்டிசென்ட் அப்படி.
ஆனால், அதை உடைத்தவர் விஜயகாந்த். அப்படி உடைத்த அவரின் 100வது படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்.கே. செல்வமணி இயக்கிய அந்த படம் பெரிய ஹிட்டாக, தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என பெயர் சூட்டி மகிழ்ந்தார் விஜயகாந்த்.
சரி, இப்ப இது எதுக்கு என்கிறீர்களா? 34 ண்டுகளுக்குபின் 4K தரம், 7.1 சவுண்ட் மிக்ஸிங் என டிஜிட்டல் முறையில் ரீமாஸ்டர் செய்து படத்தை வெளியிட உள்ளார் கார்த்திக் வெங்கடேசன். தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் விரைவில் படம் வெளியாக உள்ளது.
1991 ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு ரிலீஸாக கேப்டன் பிரபாகரன் வந்தது. விஜயகாந்த் நண்பரான இப்ராஹிம் ராவுத்தர் தயாரித்தார். புலன் விசாரணை என்கிற சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்த கையோடு தனது இரண்டாவது படமாக கேப்டன் பிரபாகரனை இயக்கினார் செல்வமணி.
விஜயகாந்த்தின் நடிப்பு, ஆக் ஷன் மற்றும் இசைஞானி இளையராஜா இசை, ராஜராஜன் ஒளிப்பதிவு, லியாகத் அலிகான் வசனங்கள், மன்சூர்அலிகான். ரூபிணி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் லிவிங்ஸ்டன் என பலரின் பங்களிப்பு ஆகியவை படத்துக்கு பலமாக அமைந்தன.
குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ‘பாசமுள்ள பாண்டியரே’ என்கிற பாடலும் ‘ஆட்டமா தேரோட்டமா’ என்கிற பாடலும் இன்றைக்கும் ஒவ்வொரு ஊரிலும் திருவிழாக்களிலும் விசேஷ வீடுகளிலும் தவறாமல் இடம் பிடிக்கும் கொண்டாட்ட பாடல்களாக அமைந்து விட்டன. அதுமட்டுமல்ல விஜயகாந்தின் அறிமுகக் காட்சி, அவர் காடுகளுக்குள் பயணிக்கும் காட்சி, வீரபத்ரன் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு என குறிப்பிடத்தக்க பிரத்யேக பின்னணி இசையை படம் முழுக்க கையாண்டு பிரமிக்க வைத்திருந்தார் இளையராஜா.