இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர் அட்லீ. ஆர்யா, சத்யராஜ், நயன்தாரா நடிப்பில் வெளியான ‘ராஜாராணி’ படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். 2013ம் ஆண்டு அந்த படம் வெளியாகி, கமர்ஷியலாக வெற்றி அடைந்தது. அதிலிருந்து அட்லீயின் வெற்றி பயணம் தொடங்கியது. அடுத்து விஜயின் அன்பை பெற்று ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய படங்களை இயக்கினார். இந்த படங்களும் பெரியளவில் பேசப்பட, தமிழ்சினிமாவில் முன்னணி இயக்குனர் ஆனார். அடுத்து இந்திக்கு சென்றார் அட்லீ. ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தை இயக்கினார். வரிசையாக தோல்விப்படங்கள் கொடுத்து வந்த ஷாருக்கானுக்கு ஜவான் வெற்றி படமாக அமைந்தது. இதுவரை 1, 100 கோடிவரை வசூலித்து, இந்திய திரையுலகில் முக்கியமான படமாக அமைந்தது.
ஜவானுக்குபின் அட்லீ யார் படத்தை இயக்கப்போகிறார் என பேச்சு எழுந்தது. விஜய் சினிமாவை விட்டு விலகுவதால், அந்த வாய்ப்பில்லை என்ற நிலை வந்தது. தமிழில் அட்லீக்கு பிடித்தவர் ரஜினிகாந்த். ஆனால், அவர் கால்ஷீட் பிஸி. ஆகவே, இந்தியில் சல்மான்கானை வைத்து படம் இயக்கப்போகிறார் என்று முதலில் பேசப்பட்டது. அடுத்து ஜூனியர் என்டிஆர் படத்தை இயக்கப்போகிறார். ரன்வீர்கபூர் படம் பண்ணப்போகிறார் என செய்திகள் கசிந்த நிலையில், புஷ்பா , புஷ்பா2 என்ற 2 வெற்றி படங்களை கொடுத்த அல்லு அர்ஜூனை அட்லீ இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.
இந்த கூட்டணி எப்படி உருவானது என்று விசாரித்தால், புஷ்பா 2 படத்தின் வசூல் 1, 800 கோடி, அட்லீ இயக்கிய ஜவான் படம் 1, 100 கோடி வசூலித்தது. இந்த கூட்டணி இணைந்தால் அந்த படம் 2 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை அள்ளும் என கணக்கு போட, இந்த கூட்டணி உருவானது. அல்லு அர்ஜூனை வைத்து படம் இயக்க பல முன்னணி இயக்குனர்கள் காத்திருந்த நிலையில், அவர் கமர்ஷியல் ஹீரோவான அட்லீயுடன் கை கோர்த்துள்ளார். இத்தனைக்கு இது அட்லீ இயக்கும் 6 வது படம் மட்டுமே. அட்லீ சொன்ன கதை, அவர் விவரித்த காட்சிகள் மிரட்டலாக இருந்ததால் அல்லு அர்ஜூன் ஓகே சொல்லியிருக்கிறார். கி்ட்டத்தட்ட 13 ஆண்டு கால இயக்குனர் பயணத்தில், 6 வது படத்தில் அட்லீ ரூ 100 கோடிவரை சம்பளம் பெறுகிறார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. தமிழில் இதுவரை 100 கோடி சம்பளத்தை யார் பெற்றது இல்லை.
அட்லீ குருநாதரான ஷங்கர் கூட 100 கோடி சம்பளம் பெற்றது இல்லை. தென்னிந்தியாவிலும் யாரும் பெற்றது இல்லை. இந்தியளவிலும் இதுவரை 100 கோடி வாங்கியதாக தகவல் இல்லை. அந்தவகையில் அட்லீ புது சாதனை படைத்துள்ளார்.