கடந்த ஆண்டு இதே நாளில் ( ஏப்ரல்-9) மூத்த அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர், சத்யா மூவீஸ் நிறுவனம் ஆர்.எம்.வீரப்பன் மறைந்தார். அவர் வாழ்க்கை வரலாறு கிங் மேக்கர் என்ற தலைப்பில் ஆவணப்படமாக உருவாகிறது. அதன் 8 நிமிட முன்னோட்டம், அவரின் முதலாண்டு நினைவுநாளையொட்டி வெளியானது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் ஆர்.எம்.வி குறித்து பேசியிருக்கிறார். ஆர். எம். வி தயாரித்த பாட்ஷா படத்தின் ஹீரோ ரஜினிகாந்த்தும் பேசியிருக்கிறார்.
பாட் ஷா பட விழா, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுடனான மோதல் என பல விஷயங்கள் குறித்து ரஜினிகாந்த் பேசியிருக்கிறார். அவர் பேசியதாவது, ‘‘ஆர். எம்.வீ கிங்மேக்கர் டாக்குமென்ட்ரியில் நான் பேசுவது மகிழ்ச்சி. என் மீது மிகுந்த அன்பு காட்டியவர்கள், மரியாதை கொடுத்தவர்கள் பலர். அதில் இயக்குனர் கே.பாலசந்தர், ஆர்..எம்.வி, சோ, பஞ்சு அருணாலம் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் இப்போது இல்லை. இவர்களை ரொம்பவே மிஸ் பண்ணுறேன். அவர் தயாரித்த பாட்ஷா பட விழாவில், நான் பேசியது பரபரப்பானது. அவர் அப்போது மந்திரியாக இருந்தார். அவரை மேடை வைத்து விட்டு நான் தமிழக வெடி குண்டு கலாச்சாரம் பற்றி பேசினேன். அப்படி நான் பேசியிருக்க கூடாது. அப்போது அந்த அளவுக்கு எனக்கு தெளிவு இல்லை. அவரை வைத்துக்கொண்டு பேசியிருக்க கூடாது. அவர் அதிமுக மந்திரியாக இருந்ததால், அவரை மந்திரி பதவியில் இருந்து துாக்கிட்டாங்க புரட்சி தலைவி ஜெயலலிதா.
நீங்க இருக்கிற மேடையில் ரஜினி எப்படி தமிழக வெடி குண்டு கலாச்சாரம் பேசலாம்னு கேட்டு, நீக்கியிருக்காங்க. எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அன்றைக்கு எனக்கு துாக்கமே வரலை. ஆர். எம். வீ வீட்டுக்கு போன் செய்தால், யாரும் எடுக்கலை. மறுநாள் காலையில், என்னாலதான் இப்படி ஆகிடுச்சே. ஸாரி என்று அவரிடம் பேசினேன். அவரோ ஒன்றுமே நடக்காத மாதிரி பேசினார். அது விடுங்க. அது பற்றி ஏன் பேசுறீங்க என்றார். அதை மனசுல வெச்சுக்காதீங்க. சந்தோசமாக இருங்க என்றார். அடுத்து என்ன படம்னு சர்வ சாதாரணமாக கேட்டார்.