சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த 2008-ம் ஆண்டுமுதல் ஆடிவருபவர் மகேந்திர சிங் தோனி. சென்னை அணி 5 முறை கோப்பைகளை வென்றதற்கும் அவரது கேப்டன்ஷிப்பே முக்கிய காரணமாக இருந்துள்ளது. மற்ற மூத்த வீரர்கள் எல்லாம் ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் 43 வயது ஆன நிலையிலும் மகேந்திர சிங் தோனி மட்டும் தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறார்.
அதே நேரத்தில் இந்த தொடரில் தோனியால் பழைய வேகத்தில் அதிரடி காட்டி ஆட முடியவில்லை. இந்த ஐபிஎல்லில் சென்னை அணி தொடர்ந்து 3 தோல்விகளை சந்தித்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதனால் ஐபிஎல்லில் இருந்து தோனி விலக வேண்டும் என்றும், ஒரு பயிற்சியாளராக மாறி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவர் வழிகாட்ட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இந்த சூழலில் சென்னை – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை (ஏப்.5) டெல்லி கேப்பிடல்ஸ் உடனான ஆட்டம் தான் தோனியின் கடைசி போட்டி என்ற வதந்தி பரவியது. தோனியின் பெற்றோர், சகோதரி, மனைவி, மகள் என அனைவரும் போட்டியை காண வந்திருந்தனர். தோனியின் மனைவி, தன் மகளிடம், ‘லாஸ்ட் மேட்ச்’ என்று சொல்வது போன்ற வீடியோக்களும் வைரல் ஆகின.
இதுபற்றி சென்னை அணியின் பயிற்சியாளர் பிளம்மிங்கிடம் கேட்டபோது, தோனி ஓய்வுபெறும் செய்தியை மறுத்தார். அது குறித்து இப்போதெல்லாம் அவரிடம் கேட்பது கூட இல்லை, ஏனெனில் அவர் வலுவாக ஆடி வருகிறார் என பிளெமிங் சொல்லி இருந்தார்.
இந்த நிலையில் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் தோனி பங்கேற்றுள்ளார். அதில் ஓய்வு குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. “இப்போது நான் ஓய்வு பெறவில்லை. நான் ஐபிஎல் விளையாடுகிறேன். எனது திட்டங்கள் மிகவும் எளிமையாக இருக்கும். வருடத்துக்கு ஒரு முறை மட்டும்தான் அதை தீர்மானிப்பேன். இப்போது எனக்கு 43 வயது ஆகிறது. இந்த சீசன் முடிந்த பிறகு ஜூலை மாதம் வந்தால் 44 வயதை எட்டுவேன்.
அதன் பிறகு விளையாடுவதா இல்லையா என்பது குறித்து முடிவு செய்ய எனக்கு எப்படியும் 10 மாதங்கள் இருக்கும். ஆனால், அதை நான் முடிவு செய்வதில்லை. எனது உடல் தான் முடிவு செய்கிறது. நம்மால் முடியும் அல்லது முடியாது என்று உடல்தான் சொல்லும். என்னவென்று அப்போது பாக்கலாம்.” என தோனி அதில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.