கல்யாணத்துக்குமுன்பு, கல்யாணத்துக்குபின் என்பதன் சுருக்கம்தான் க.மு.க.பி. தலைப்பிலேயே கதை இருக்கிறது. புஷ்பநாதன் ஆறுமுகம் இயக்கிய இந்த படம், காதலித்து திருமணம் செய்த விக்னேஷ்ரவி, சரண்யா ரவிச்சந்திரன் கதையை பேசுகிறது.
சினிமா இயக்குனராக ஆசைப்படும் ஹீரோ விக்னேஷ்ரவி அதற்கான முயற்சியில் இருக்கிறார். வருமானம் இன்மை, ஏமாற்றம், துரோகம் என கஷ்டப்படுகிறார். அவரை காதலித்து திருமணம் செய்யும் சரண்யாரவி அவர் கனவுக்கு உதவியாக இ ருக்கிறார். தான் வேலைக்கு போய் கணவருக்கு உதவுகிறார். ஒரு கட்டத்தில் இரண்டுபேருக்கும் இடையே ஈகோ மோதல் வருகிறது. ஒரு கட்டத்தில் அது விவகாரத்தில் போய் நிற்கிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பதை மாறுபட்ட திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். இந்த கதையில் டிஎஸ்கே, பிரியதர்ஷினி ஜோடி, நிரஞ்சன், அபிராமி என, இன்னும் 2 ஜோடிகளின் வாழ்க்கையும் இடையிடையே வருகிறது. அவர்களின் மனநிலை, பிரச்னைகளையும் கதை பேசுகிறது.
முழு படத்தை அழகாக தாங்கி நிற்கிறார் சரண்யா. இதற்கு முன்பு சின்ன, சின்ன கேரக்டரில் நடித்தவர் இதில் ஹீரோயினாக, அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். கணவன் அன்புக்காக ஏங்குவது, சண்டை, ஏக்கம் என பல விஷயங்களில் பின்னி எடுத்து இருக்கிறார். வேலைக்கு போகும் பெண்களின் மனநிலை, காதல் திருமணம் செய்த பெண்களின் பிரச்னைகளை அவர் கேரக்டர் அழுத்தமாக பேசுகிறார். சினிமா இயக்குனர் வாய்ப்பு தேடுபவராக, மனைவி சம்பாதியத்தில் வீட்டில் இருப்பவராக, தயாரிப்பாளர், நண்பர்களால் புறக்கணிப்படுபவராக ஹீரோ விக்னேஷ்ரவியும் சிறப்பாக நடித்து இ ருக்கிறார். மற்ற ஜோடிகளான டி.எஸ்.கே, பிரியதர்ஷினி காதலும், மனைவியை அடிமை மாதிரி நடத்தும் நிரஞ்சன், அபிராமி கதையும் மனதில் நிற்கிறது
சின்ன பட்ஜெட், வளரும் நடிகர்கள் நடித்தாலும், திரைக்கதையும், ஒவ்வொரு கேரக்டரின் சுவாரஸ்யமும் படத்தை ரசிக்க வைக்கிறது. இவர்கள் தவிர, நண்பர்கள், பக்கத்து வீட்டு பெண், இணை இயக்குனர், சினிமா வாய்ப்பு தேடும் நபர், தயாரிப்பாளர் போன்ற கேரக்டர்களும் நச். சில சமயம் கதை மெதுவாக நகர்ந்தாலும், அடுத்தடுத்த திருப்பங்கள் படத்தை விறுவிறுப்பாக்குகின்றன.சினிமாதனம் அதிகம் இ்ல்லாத பாத்திர படைப்புகளும், அனைவரின் இயல்பான நடிப்பும் படத்துக்கு பலம். இயல்பான வசனங்களும், ஜி.எம். சுந்தர் ஔிப்பதிவும், தர்ஷன் இசையும் படத்தை அழகாக்குகிறது.