எஸ். சஷிகாந்த் இயக்கத்தில், மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீராஜாஸ்மின் நடித்த ‘டெஸ்ட்’ படம், ஏப்ரல் 4ல் ரிலீஸ் ஆகிறது. சென்னையில் நடந்த இந்த பட டிரைலர் வெளியீட்டு விழாவில் மாதவன் பேசியது ‘‘ஒரு நல்ல கேரக்டர் கிடைத்தால், அதில் சிறப்பாக நடிக்க ஆர்வமாக இருக்கும். அந்தவகையில் இந்த படத்தில் ஆர்வமாக நடித்தேன். சித்தார்த் நன்கு படித்தவர். நிறைய இசை ஞானம் உடையவர். நல்ல நடிகர் ’’ என்றார்
நடிகர் சித்தார்த் பேசியது: ‘‘எனக்கும் மாதவனுக்கும் நிறைய தொடர்பு, நட்பு உண்டு. சினிமா வந்த முதல் நாளில் இருந்து அவரிடம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவர் நடித்த கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறேன். நான் முதலில் நேரில் பார்த்து வியந்த ஹீரோ. அவருடன் இணைந்து ஆயுத எழுந்து, ரங்தேபசந்தி படங்களில் நடித்து இருக்கிறேன். இது, 4வது முறை. என்னை சாக்லெட் பாய், லவ்வர் பாய் என்பார்கள். உண்மையில், முதலில் இப்படி பேசப்பட்டவர் மாதவன்தான். பலவகைகளில் அவர் எனக்கு முன்னோடி. இந்த படத்தில் நடித்தபோது நாம பிரஷர் ஆக நடிக்க வேண்டும். ஜாலியாக நடிப்போம் என இரண்டுபேரும் இணைந்து முடிவெடுத்தோம். அவரும் மற்றவர்களும் நன்றாக நடிக்க வேண்டும் என்று அவர் விரும்புவார். டெஸ்ட் படம் கிரிக்கெட் பின்னணியில் உருவாகி உள்ளது. நான் கிரிக்கெட் வீரனாக வருகிறேன். நம் நாட்டில் கிரிக்கெட் என்பது வாழ்க்கை. யாரைக் கேட்டாலும் கிரிக்கெட் பிடிக்கும் என்பார்கள். நானும் அதில் ஒருவன். தினமும் பல மணி நேரம் கிரிக்கெட் பபார்த்து, விளையாடி அந்த விளையாட்டுடன் பழக்கமாகி இருக்கிறேன். அதனால், கிரிக்கெட்டராக வெறுமனே நடித்து ஒப்பேத்த முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டர் ரோல் நடிப்பது எளிது கிடையாது. நிறைய பேரிடம் இருந்து இன்ஸ்பையர் ஆகிதான் அர்ஜூன் என்ற டெஸ்ட் கிரிக்கெட்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கிரிக்கெட் பார்க்கும்போது வரும் பதட்டம் இந்தப் படம் பார்க்கும்போதும் உங்களுக்கு வந்தால் அதுவே எங்களுக்கு வெற்றிதான். எனக்கு கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட் பிடிக்கும். அவருக்கு என் கதாபாத்திரத்தை டெடிகேட் செய்ய விரும்புகிறேன்” என்றார்.