No menu items!

மனோஜின் நிறைவேறாத ஆசை

மனோஜின் நிறைவேறாத ஆசை

இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் (48) நேற்று மாலை காலமானார். கடந்த சில நாட்களுக்குமுன்பு அவருக்கு சிறுநீரகங்கள் செயல் இழந்துள்ளது. அதை தொடர்ந்து இதயத்திலும் பிரச்னை ஏற்பட, சென்னை தனியார் மருத்துவமனையில் இதய ஆபரேஷன் செய்து கொண்டார். பின்னர், வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திடீரென காலமானார்.

தாஜ்மஹால் படத்தில் தனது தந்தையால் ஹீரோ ஆக்கப்பட்டாலும், அவருக்கு அப்பா பாணியில் இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசையே மனோஜ்க்கு அதிகம் இருந்தது. ஒரு கட்டத்தில் அவர் நடித்த படங்கள் தோல்வி அடைய, சின்ன வேடங்களில் கூட நடிக்க ஆரம்பித்தார். ஆனாலும், பல ஆண்டுகளாக இயக்குனர் ஆக வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டே இருந்தார். கடந்த ஆண்டு மார்கழி திங்கள் என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அந்த படத்தில் தனது தந்தை பாரதிராஜாவையும் நடிக்க வைத்தார். இதற்கிடையில் கல்லுாரியில் படித்த மனோஜ் மூத்த மகள் மதிவதினி இயக்குனர் ஆனார். அவர் தனது கல்லுாரி புராஜக்ட்டுக்காக இயக்கிய படத்தில் , தனது தாத்தா பாரதிராஜாவை நடிக்க வைத்தார். அந்தவகையில், அப்பா, தன்னை போல, மகளும் இயக்குனர் ஆனதில் மனோஜ்க்கு ரொம்பவே சந்தோஷம். பாரதிராஜாவை மகள் இயக்கும் வீடியோவை பலருக்கும் பகிர்ந்து பெருமைப்பட்டார். கடந்த ஆண்டு நடந்த பாரதிராஜா பிறந்தநாள் விழாவில் மனைவி நந்தனா, மகள்களுடன், பாரதிராஜாவுக்கு கேக் வெட்டி சந்தோஷப்பட்டார்.

இப்படி மனோஜ் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தாலும், அப்பா மாதிரி அதிக படங்கள் இயக்கவில்லை. பெரியளவில் தான் இயக்கிய படம் வெற்றி அடையவில்லை என்ற வருத்தம் அவரிடம் அதிகம் இருந்தது. அப்பா இயக்கிய சிவப்பு ரோஜாக்கள் படத்தை ரீமேக் செய்ய வேண்டும். அதன் மூலம் தான் சிறந்த இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவு ரொம்ப காலமாக மனோஜ்க்கு இருந்தது. ஆனால், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் கிடைக்காத காரணத்தால் அந்த படத்தை அவரால் எடுக்க முடியவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக மேலாக சிவப்பு ரோஜாக்கள் ரீமேக்கை எடுக்க போராடியும், அது நிறைவேறாத ஆசையாகவே போனது.

தேனியில் 1976ல் மனோஜ் பிறந்தார். அந்த சமயத்தில் பாரதிராஜா இயக்குனர் ஆகவில்லை. மகன் பிறந்த செய்தி கேட்டு, அவரை போய் பார்க்க முடியாமல் தவிக்க, ஒரு நண்பர்தான் தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து பணம் கொடுத்து இருக்கிறார். அந்த பணத்தை எடுத்துக்கொண்டு தேனி சென்று இருக்கிறார்.அதேசமயம், விரைவில் பாரதிராஜாவில் முதல் படம் தொடங்கபட, மகன் பிறந்த நல்ல நேரத்தில் தான் இயக்குனர் ஆகியிருப்பதாக சந்தோஷப்பட்டு இருக்கிறார். ஆரம்பத்தில் பாரதிராஜா இயக்கிய பல படங்களிலும், மணிரத்னத்தின் பம்பாய் படத்திலும் மனோஜ் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

பின்னர், அமெரிக்காவில் போய் நடிப்பு பயிற்சி எடுத்துவிட்டு, தாஜ்மஹால் படத்தின் மூலம் ஹீரோ ஆகியிருக்கிறார். கடைசியாக விருமன் படத்திலும், ஸ்நேக் அண்ட் லேடர் என்ற வெப்சீரியலிலும் மனோஜ் நடித்து இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...