நட்ராஜ், உபாசனா நடிக்கும் படம் ‘எனை சுடும் பனி’. இவர்களை தவிர, கே.பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், மனோபாலா, தலைவாசல் விஜய், முத்துக்காளை, சிங்கம்புலி, உட்பட பலர் நடித்துள்ளனர். என்.எஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தின் கதை பொள்ளாச்சியில் நடந்த சில உண்மை சம்பவங்களின் பின்னணி என்று கூறப்படுகிறது. இது குறித்து பேசும் படக்குழுவோ “ஐபிஎஸ் அதிகாரியாகும் ஆசையில் இருக்கிறார் ஹீரோ. எதிர்பாராத விதமாக அவரே போலீஸ் விசாரணையில் சிக்குகிறார். என்ன நடந்தது. அவரின் ஐபிஎஸ் கனவு நிறைவேறியதா என்பதை சைக்கோ, கிரைம் த்ரில்லர், சஸ்பென்ஸ், காதல் கலந்து சொல்லியிருக்கிறோம். மனநிலை சரியாக இல்லாவிட்டால் பனி கூட சுடும் என்பதால் இந்த தலைப்பு’ என்கிறார்.
சமீபத்தில் இந்த படம் மற்றும் இன்றைய சினிமா நிலவரம் குறித்து பேசியுள்ள கே.பாக்யராஜ் ‘‘காதலுக்கு எதிரியாக இருக்கும் ஒரு குற்ற சம்பவத்தின் உண்மை நிலையை வெளிக் கொண்டு வரும் போலீஸ் அதிகாரியாக வருகிறேன். இளம் பெண்கள் காணாமல் போக, அதை கண்டுபிடிக்கிற கேரக்டர். சென்னை, பொள்ளாச்சி, நெல்லியம்பதியில் படப்பிடிப்பு நடந்தது. உண்மையாக நடந்த ஒரு சம்பவத்தை கருவாக கொண்டு எடுத்த படம். எந்த மாதிரியான உண்மை சம்பவம் என்பது சஸ்பென்ஸ். இன்றைக்கு சினிமா பிஸியாக இருக்கிறது. ஆனாலும், பல நல்ல படங்களுக்கு, சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு சினிமா நிலவரம் மோசமாக இருக்கிறது. பல படங்கள் ஓடவில்லை என்று தகவல்கள் வருகின்றன.
முன்பெல்லாம் தியேட்டர் தவிர, ஓடிடியில் படம் வெளியானது. ஓடிடி மூலம் நல்ல வருமானம் கிடைத்தது. ஆனால், இப்போது ஓடிடியில் உடனடியாக படம் வாங்குவதில்லை. தியேட்டரில் படம் ஓடட்டும். நல்ல விமர்சனங்கள் வரட்டும். அப்புறம், வாங்கிக்கிடுறோம் என ஒதுங்கிவிடுகிறார்கள். புதுமுக படங்களுக்கு வரவேற்பு குறைவு. இன்றைக்கு பிரபலமாக இருப்பவர்கள் ஒரு காலத்தில் புதுமுகங்கள்தானே. ஏன் தியேட்டர் கிடைப்பதில்லை என்பது குறித்து சினிமா சங்கங்கள் தலையிட்டு பேசணும். நான் தனிப்பட்ட முறையில் பேச முடியாது.