மதுரையை சேர்ந்த டான்ஸ் மாஸ்டரான அம்மா ராஜசேகர், தமிழ், தெலுங்கில் 300க்கும் அதிகமான படங்களில் பணியாற்றியவர். பின்னர், தெலுங்கில் கோபிசந்த் நடித்த ரணம் என்ற படத்தை இயக்கினார். இப்போது 12வது படமாக ராகின்ராஜ், அங்கிதா, விஜி சந்திரசேகர், சுந்தரா டிராவல்ஸ் நடிக்கும் ‘வெட்டு’ படத்தை இயக்கியுள்ளார். சென்னையில் நடந்த இந்த பட விழாவில் இயக்குனர் கஸ்துாரிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது ‘‘ஒரு 17 வயது பையன் செய்யும் மாபெரும் சம்பவம் தான் இப்படம். அம்மா சென்டிமென்ட், காதல், வீரம், விவேகம் என மண் சார்ந்த உண்மை சம்பவமாக ‘வெட்டு’உருவாகி உள்ளது. என் மகன் தனுஷ் மாதிரி இந்த ஹீரோ இருக்கிறார். அவர் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் படங்களுக்கு இந்த மாதிரி பாடல் வெளியீட்டு விழா நடத்தவில்லை. அவர் கஷ்டப்பட்டு வளர்ந்தார். இன்றைக்கு சினிமா ஆரோக்கியமாக இருக்கிறது.நானும் 70 வயதை தாண்டினாலும் ஆரோக்கியமாக இ ருக்கிறேன். என்ன, இப்போது கொஞ்சம் சுகர் இருக்கிறது. துள்ளுவதோ இளமை, காதல்கொண்டேன் படத்துக்குபின்னர்தான் சுகர் வந்தது. என் வாரிசுகள் நல்லா வந்திட்டாங்க. அதுபோதும், இப்ப, என் மகள் வயிற்று பேரன் கூட, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் ஹீரோவாகிவிட்டார், நான் சந்தோஷமாக இருக்கிறேன்.
என் வெற்றிக்கு என் மனைவிதான் முக்கிய காரணம். நாட்டுப்புற பாட்டு என்ற படத்தை முதலில் தயாரித்தேன். அதற்குமுன்பிலிருந்து அவர் ஆதரவு எனக்கு இருக்கிறது. என் கழுத்தை பிடித்து தள்ளினால் கூட, விஜயலட்சுமி என்ற அவர் பெயரை, அவர் உழைப்பை சொல்லாமல் மேடையை விட்டு போகமாட்டேன். அவர் அதிகம் படிக்காத கிராமத்து பெண். மதுரையில் குடியிருந்தபோது 2ரூபாய் கொடுத்து காய்கறி வாங்கிட்டு வர சொன்னால் கூட பதறுவார். அந்த அளவுக்கு அப்பாவி. இப்படி இருக்கிறாரே என்று யோசித்தேன். பிற்காலத்தில் படம் தயாரிக்க வேண்டிய நிலை வந்தபோது, அவரை தயாரிப்பாளர் ஆக்கினேன். அவர் பெயரை வைத்து கடன் வாங்கினேன். 30 கோடிக்குமேல் பட்ஜெட் உள்ள படங்களை கூட அவர் தயாரித்தார். அவர் பட்ட கஷ்டங்கள் அவ்வளவு. படம் தயாரித்ததால் கோர்ட், போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட சென்று இருக்கிறோம்.
என் வாரிசுகள் சினிமாவுக்கு வந்தார்கள். அவர்கள் தலையெழுத்து அப்படி இருந்தால் சினிமாவுக்கு வருவார்கள். என் மகள்கள் டாக்டர் ஆகிவிட்டார்கள். செல்வராகவன் இன்ஜினியரிங் படித்தார். அவ்வளவு கஷ்டப்பட்டு அந்த சீட் வாங்கினேன். 3வது ஆண்டு படிக்கும்போது ஒருநாள் ‘நான் இனி படிக்கமாட்டேன். இனி சினிமாதான் என்றார். தெருத்தெருவாக அழைந்து சீட் வாங்கினேன்னு யோசித்தேன். நாம எவ்வளவு கஷ்டப்பட்டு சென்னை வந்தோம், இப்படி சொல்றீயே என்ற அவர் அம்மா அடிக்க போய்விட்டார். ஆனால், அவர் பிடிவாதமாக இருந்தார். ஆனாலும் அவருக்கு பிடித்ததை பண்ணுட்டும் என்று விட்டுவிட்டேன். ஆனாலும், படிப்பை முடி, சினிமா வர ஏற்பாடு பண்ணுறேன் என்றேன்.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தார். செல்வராகவனை அமெரிக்காவுக்கு மேற்படிப்பு படிக்க ஏற்பாடு செய்தேன். என்னை நாடு கடத்த பிளானா? நீங்க கொடுத்த வாக்கை நிறைவேற்றுங்க. சினிமாவுக்குதான் வருவேன் என்றார். ஆனால், அவரை எந்த இயக்குனரும் அவரை உதவி இயக்குனராக சேர்க்க மறுத்துவி்ட்டார்கள். உங்க மகனை திட்ட வேண்டியது வருமேனு யோசித்தார்கள். கடைசியில், செல்வராகவன் துள்ளவதோ இளமை படத்தை பெரும்பாலும் இயக்கினார். ஆனால், என் பேரனுக்கு பெரிய பிரச்னை இல்லை. அவர் விஸ்காம் படிக்க ஆசைப்பட்டார். ஆனால், அவர் மாமாவான தனுஷ், அவரை நடிக்க வைத்துவிட்டார். அவர் ஹீரோவாகிவிட்டார். ஆகவே, குழந்தைகளுக்கு பிடித்ததை, அவர்கள் செல்லும் பாதையை தயார் செய்யுங்கள் தனுஷ் ஈஸியாக ஜெயிக்கவில்லை. பொல்லாதவன் படத்தில் சிக்ஸ்பேக் வைத்து நடித்தார். அவர் நடிப்பை, உடல் கஷ்டத்தை பார்த்து நாங்கள் கண் கலங்கிவிட்டோம். நடிகனுக்கு உடம்புதான் முதலீடு என்பார் நடிகர் சிவகுமார். அதை சரியாக கவனித்துக்கொள்ள வேண்டும்
தனுஷ் கூட எளிதில் நடிகர் ஆகவில்லை. அந்த சமயத்தில் நான் ஒரு படத்தை இயக்க வேண்டிய கட்டாயம். இல்லாவிட்டால் ஊருக்கு போய்விட வேண்டிய நிலை. தெலுங்கில் உதய்கிரண் என்ற ஹீரோவிடம் பேசினோம். அவரும் நடிக்க ரெடியாக இருந்தார். ஆனால், அவரோ கடைசி நேரத்தில் மறுத்துவிட்டார். அப்போது நம் வீட்டில் ஒரு பையன் இருக்கிறாரோ என்று நினைத்து, தனுசை சினிமாவுக்கு அழைத்து வந்தேன். ஸ்கூல்ல டிராப் பண்ணுறேன்னு சொல்லிட்டு, படப்பிடிப்பு அழைத்து சென்றேன். அவரை படிக்கவில்லை. அவர் லைப் இப்படி ஆகிவிட்டதேனு வீட்டில் அவ்வளவு எதிர்ப்பு. ஆனால், அவர் ஜெயித்தார். துள்ளுவதோ இளமை படத்தின் 60% படத்தை நான் எடுத்தேன். மீதியை செல்வராகவன் இயக்கினார். அவரால் அந்த பட கலர் மாறியது. பாடல் ஹிட்டானது. யுவன்ஷங்கர்ராஜா இல்லாவிட்டால், செல்வராகவன், தனுஷ் இல்லை.