பண்ணையாரும் பத்மினியும், சித்தா படங்களை இயக்கிய எஸ்.யு. அருண்குமார் அடுத்து இயக்கும் படம் வீரதீரசூரன். விக்ரம், துஷாராவிஜயன், எஸ்.ஜே.சூர்யா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் மார்ச் 27ம் தேதி வெளியாக உள்ளது. தமிழில் இந்த படம் மட்டும் தனியாக வெளியாகிறது என்று நினைத்திருந்தவேளையில், பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த பெரிய பட்ஜெட் படமான எம்புரான் மார்ச் 27ம் தேதி வெளியாவதாக அறிவிப்பு வந்துள்ளது.
மலையாளத்தில் 2019ம் ஆண்டு வெளியாக பெரிய வெற்றி பெற்ற லுாசிபர் படத்தின் 2ம் பாகமே எம்புரான். இந்த படத்தை முதற்பாகம் போல, முன்னணி மலையாள நடிகரான பிருத்விராஜ் இயக்கியுள்ளார், அவரும் நடித்துள்ளார் மோகன்லால் ஹீரோ. அவரை தவிர, இன்னொரு பிரபல மலையாள ஹீரோவான டோவினோ தோமசும் படத்தில் இருக்கிறார். இவர்களை தவிர, ஆண்ட்ரியா , சூரஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், சாய்குமார் உட்பட பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் இருக்கிறது.
சமீபத்தில் மலையாளத்தில் அதிக நட்சத்திரங்கள் நடிக்கும் படம் மட்டுமல்ல, அதிக பட்ஜெட்டில் உருவான படமும் எம்புரான்தான். கி்ட்டத்தட்ட 200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் படம் உருவாகி, மலையாள திரையுலகில் புதிய சாதனை படைத்துள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்துள்ளன. இந்த படத்தின் படப்பிடிப்பு 2023ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி, ஃபரிடாபாத்தில் தொடங்கியது. ஷிம்லா, லே, ஐக்கிய அரசுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகள், சென்னை, குஜராத், ஐக்கிய அரபு அமீரகம், மும்பை மற்றும் கேரளா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது
மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக “எம்புரான்”உருவாகி உள்ளது.