எஸ்.சஷிகாந்த் இயக்கத்தில் மாதவன், மீராஜாஸ்மின், நயன்தாரா, சித்தார்த் நடிப்பில் உருவான படம் ‘டெஸ்ட்’. இந்த படம் முடிவடைந்த நிலையில், முன்னணி நடிகர்கள் நடித்து இருந்ததால் எப்போது தியேட்டரில் வரும் என்று பலரும் ஆர்வமாக இருந்தனர்.
ஆனால், டெஸ்ட் படம் தியேட்டருக்கு வராது. நேரடியாக ஏப்ரல் 4ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது என்று படக்குழு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில், ஒய்நாட் ஸ்டூடியோஸ் த யாரிக்கும் இந்த படத்தில் தனது கேரக்டர் குறித்து நயன்தாரா பேசியுள்ளார்
அதில் ‘‘தான் குமுதா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். குமுதா ஏங்குவது எல்லாம் அன்பு, அமைதியான வீடு, அன்பான கணவர், அம்மா என்றழைக்க ஒரு குழந்தை இதெல்லாம்தான். ஆனால், இந்த கனவுகளுக்கும் சோதனை வருகிறது. அதனை அன்பு மற்றும் வலிமை மூலம் குமுதா எதிர்கொள்கிறாள். நம்பிக்கைக்கும் மனவேதனைக்கும் இடையில் சிக்கி தான் விரும்பிய வாழ்க்கைக்காக போராடுகிறாள். கனவு காணத் துணிந்து அதை விட்டுக்கொடுக்க மறுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளுடைய கதை தான் டெஸ்ட் குமுதாவின் கனவு ஒரு வீடு, ஒரு குடும்பம் மற்றும் நீடித்த காதல் என்ற எளியதுதான்.
ஆனால், வாழ்க்கை அவள் எதிர்பார்க்காத விதத்தில் அவளை சோதிக்கிறது. தனது கனவிற்காக போராட அவளைத் தள்ளுகிறது. குமுதாவின் பயணத்தைத் திரையில் கொண்டு வந்திருப்பது எனக்கு எமோஷனலான விஷயம். குமுதாவின் கனவுகள் நிஜமாகுமா அல்லது எட்டாத விஷயமாகவே இருக்குமா என்பது கிளைமாக்ஸ். ’’ என்று கூறியுள்ளார்.
தியேட்டரில் வெளியாக வெற்றி பெறவதை விட, ஓடிடியில் ஏன் ரிலீஸ் என்று விசாரித்தால், ஓடிடி பிசினசில் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம். தியேட்டரில் வெளியாக வேண்டும் என்றால் படத்தை விளம்பரப்படுத்த வேண்டும். ஆனால், பேட்டி, பாடல் வெளியீட்டுவிழாவுக்கு நயன்தாரா வரமாட்டார். தவிர, இன்றைய தேதியில் தியேட்டரில் வெளியாகும் பல படங்கள் தோல்வியை தழுவுகிறது. அதனால், ஓடிடிக்கு விற்றுவிட்டார் த யாரிப்பாளர்கள் என்கிறார்கள். இதற்கு முன்பு கொரோனா காலத்தில் ஜெய்பீம் ,சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது.