ப.பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்களுக்குபின் தனுஷ் இயக்கியுள்ள படம் இட்லிகடை. அவரே ஹீரோ. நித்யாமேனன் ஹீரோயின். அருண்விஜய் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில், ஆகாஷ்பாஸ்கரன் தயாரிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பக்காவாக நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகும் என்று தெரிகிறது. இது கு றித்து படக்குழு கூறியது:
‘‘தனுஷ் நடித்த படம், அவர் இயக்கிய படம், திருச்சிற்றம்பலம் படத்துக்குபின் தனுஷ், நித்யாமேனன் இணைந்த படம் என்பதால் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. தவிர, பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் அருண்விஜய் வில்லன் என்பதாலும் படத்தை பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், ஏப்ரல் 10ம் தேதி ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட்பேட் அக்லி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் படத்துக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்பதாலும், அந்த படத்தையும், இட்லி கடை படத்தையும் ஒரே நிறுவனம் ரிலீஸ் செய்வதாலும், இட்லிகடை ரிலீஸ் தேதி மாற்றி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. அஜித் படத்துடன் மோதினால் தியேட்டர்கள் குறைவாக கிடைக்கலாம். அஜித் ரசிகர்கள் கடும் விமர்சனங்கள் செய்யலாம். ஆகவே, ஏப்ரல் 10க்கு பதில், விரைவில் புது ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும்.