No menu items!

நான் கடவுள் இல்லை – இளையராஜா

நான் கடவுள் இல்லை – இளையராஜா

என்னை, இசைக்கடவுள் என்று கூறுகிறீர்கள். நான் கடவுள் இல்லை சாதாரண மனிதன் என்று இளையராஜா கூறியுள்ளார்.

லண்டனில் உள்ள உலக புகழ்பெற்ற ஈவண்டின் அப்பல்லோ அரங்கத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றினார். இதையொட்டி திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றிவிட்டு சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மாலை அணிவித்து வரவேற்றார்.

வரவேற்பு நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் இளையராஜா கூறியதாவது…

என்னை நீங்கள் அனைவரும் மலர்ந்த முகத்தோடு வழியனுப்பி வைத்தீர்கள். அத்துடன் இறைவன் ஆசிர்வதித்தார். சிம்பொனி நிகழ்ச்சியை சிறப்பாக முடித்துத் திரும்பியுள்ளேன்.

இசைக் குறிப்பை யார் வேண்டுமானாலும் எழுதிடலாம். அவ்வாறாக எழுதிக் கொடுத்தால் அதை யார் வேண்டுமானாலும் வாசித்துவிடலாம். ஆனால், அதை வாசிப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி வாசித்தால் என்னவாகும். அப்படி ஆகிவிடாமல் லண்டனில் கண்டக்டர் மைக்கேல் டாம்ஸ் சிறப்பாகச் செய்துதந்தார். நான் இங்கிருந்து லண்டன் சென்றதும் ஒரே ஒரு ஒத்திகையில் கலந்து கொள்ளவே நேரமிருந்தது. சிம்பொனி அரங்கேற்றத்தில் அதன் விதிமுறைகளை மீறிவிடக்கூடாது. அதைப் பின்பற்றி 80 இசைக் கலைஞர்களும் ஒன்றிணைந்து மியூஸிக் கண்டக்டரை கவனிக்க வேண்டும். அவ்வாறாக ஒவ்வொரு ஸ்வரத்திலும் அவர்கள் கவனத்தை குவித்து வாசித்தபோது கேட்பவர்கள் மூச்சுவிட மறந்து ரசித்தனர்.
சிம்பொனியில் மொத்தம் 4 பகுதிகள். அந்த 4 மூவ்மென்ட் முடியும் வரை யாரும் கைதட்டக் கூடாது. அது விதிமுறை. ஆனால் அதற்கு மாறாக ரசிகர்கள் ஒவ்வொரு மூவ்மென்ட் முடிந்தபின்னர் கைதட்டி ஆச்சரியப்படுத்தினர். ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் போது கண்டக்டர் மைக் என்னைப் பார்த்து மகிழ்ச்சியில் சிரிப்பார்.

மேலும், சிம்பொனியின் இரண்டாவது பகுதியில் நான் இசையமைத்த சினிமாப் பாடல்கள் இசைக்கப்பட்டன. அதில் ஒரு பாடலை நான் அவர்களோடு இணைந்து பாடினேன். எனக்கு இங்கே எனது இசைக்குழுவுடன் பாடியே பழக்கம். அவர்களோடு பாடி எனக்குப் பழக்கமில்லை. ஆனால் அவர்களோடு பாடினேன். அது மிகவும் கடினம். அதற்கும் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள்.

மொத்தத்தில் இந்த சிம்பொனி இசை வல்லுநர்கள் பாராட்டிய சிம்பொனியாகியுள்ளது. அது உங்களின் வாழ்த்து. இதை நான் அரங்கேற்றியது தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை.
மேலும், முதல்வர் அரசு மரியாதையோடு வரவேற்றது நெகிழ்ச்சியாக உள்ளது. அதேபோல், தமிழக மக்களின் வாழ்த்தும், வரவேற்பும் எனக்குப் பெருமையாக இருக்கிறது.

சிம்பொனி இசையை நீங்கள் டவுன்லோடு செய்து கேட்கக் கூடாது. அதை அந்த இசைக்கலைஞர்கள் இசைக்க அமைதியான அரங்கில் நீங்கள் நேரடியாகக் கேட்க வேண்டும். அதனால், 13 தேசங்களில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளது. துபாய், பாரிஸ், ஜெர்மன் இப்படி பல நாடுகளில் இந்த நிகழ்ச்சி நடக்கப்போகிறது.
என் மீது மக்களாகிய நீங்கள் அதீத அன்பு வைத்துள்ளீர்கள். என்னை, இசைக்கடவுள் எனக் கூறுகிறீர்கள். நான் சாதாரண மனிதன், என்னைப் பற்றி எனக்கு எந்த எண்ணமும் இல்லை. சொல்லப்போனால் நீங்கள் என்னைக் கடவுள் என்று அழைக்கும்போது, கடவுளை ஏன் இளையராஜா அளவுக்கு இறக்குகிறார்கள் என்றே நினைப்பேன். இந்த சிம்பொனி நிகழ்ச்சி ஒரு ஆரம்பம். 82 வயதாகிவிட்டது, இப்போது என்ன ஆரம்பம் என நினைக்காதீர்கள். நீங்கள் நினைக்கும் எந்த அளவிலும் நானில்லை.

பண்ணைபுரத்தில் வெறுங் காலில் நடந்தேன். வெறுங்காலுடன் தான் இங்கே வந்தேன். இன்று சிம்பொனி இசைத்து வந்துள்ளேன்.

முடிந்தால், இளைஞர்கள் என்னை முன்மாதிரியாக வைத்து அவரவர் துறையில் முன்னேறி நாட்டுக்கு நலம் சேர்க்க வேண்டும். இதுவே எனது அறிவுரை.

இவ்வாறு இளையராஜா பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...