அதிகாரத்தில் நீடிப்பதற்காக வர்த்தகப் போரைப் பயன்படுத்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நினைப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரை ஆளுநர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு பிற நாடுகள் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அவர்கள் விதிக்கும் இணையான வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அந்த வகையில், கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடா இணைக்கப்படும் என்று தொடர்ந்து டிரம்ப் தெரிவித்து வருகிறார்.
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருள்களுக்கு 25% வரி விதித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.
இந்த நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் தன்னை தொடர்பு கொண்டு பேசியதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இவர்களின் உரையாடல் குறித்து டிரம்ப் தெரிவித்ததாவது:
“கனடாவைச் சேர்ந்த ஜஸ்டின் என்னை தொடர்புகொண்டு வரி உயர்வு குறித்து தொலைபேசியில் உரையாடினார். கனடா மற்றும் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் வந்த போதைப் பொருள்களால் பலர் உயிரிழந்ததை அவரிடம் சொன்னேன். தற்போது போதைப் பொருள் ஊடுருவல் நிறுத்தப்பட்டதாக அவர் கூறியதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பிரதமர் தேர்தல் எப்போது நடைபெறவுள்ளது என்பதை அவரால் என்னிடம் கூறமுடியவில்லை. கனடாவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற ஆர்வத்தை எனக்குள் தூண்டியது. அதன்பிறகுதான் வர்த்தகப் போரை பதவியில் நீடிக்க பயன்படுத்த விரும்புகிறார் என்பதை உணர்ந்தேன்” எனப் பதிவிட்டிருந்தார்.