“இந்திய மக்கள்தொகையில் மூன்றில் ஒருபங்கினர் 2050-இல் அதிக உடல் எடையால் அவதியுறுவர் என்கிறது சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று.
”யப்பப்பா… இந்த உடம்பை வச்சுகிட்டு நடக்கக்கூட முடியலப்பா…” என்று நம்ம ஊரில் பலர் புலம்புவதை இனி அதிகம் கேட்கலாம். ஆம்.. 2050-ஆம் ஆண்டு காலகட்டத்தில், இந்தியாவில் அதீத உடல் எடையால் அவதியுறும் மக்கள்தொகை 440 மில்லியன்(44 கோடி) என்ற உச்சத்தை எட்டும் என்கிற அதிர்ச்சி தகவல் புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக(ஐசிஎம்ஆர்) ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையின் முடிவுகள் ‘தி லேன்செட்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்திய மக்கள்தொகையில் 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 81 மில்லியன்(8.10 கோடி) | பெண்களில் 98 மில்லியன்(9.8 கோடி) பேர் அதிக உடல் எடையால் அவதிப்பட்டனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய ஆய்வின்படி, 2050-இல் இந்தியாவில் 218 மில்லியன்(21.80 கோடி) ஆண்களும், 231(23.10 கோடி) பெண்களும் அதீத உடல் எடையால் அவதியுறுவர் என்று கூறப்படுகிறது.
இதன்மூலம், உலகளவில் அதிக உடல் எடையால் அவதியுறுவோரின் புகலிடமாக, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா மாறும் அபாயமும் உள்ளது. இந்த பட்டியலில் சீனா, இந்தியாவுக்கு அதற்கடுத்தடுத்த இடங்களில், அமெரிக்கா, பிரேஸில், நைஜீரியா உள்ளன.
கடந்த 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் அதாவது, 25 வயதுக்கு மேற்பட்ட சுமார் ஒரு பில்லியன் ஆண்களும் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட பெண்களும் அதிக உடல் எடையால் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில், 2050-இல் இந்த எண்ணிக்கையானது உலகளவில் சுமார் 3.8 பில்லியன் ஆக உயரக்கூடும். ஆண்கள் – 1.8 பில்லியன்(180 கோடி) | பெண்கள் – 1.9 பில்லியன்(190 கோடி).