‘முத்திரை’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ ஆகிய படங்களுக்குப்பின் ஸ்ரீநாத் இயக்கி, நடித்துள்ள படம் ‘லெக் பீஸ்’. யோகி பாபு, மணிகண்டன், கருணாகரன், ரமேஷ் திலக், விடிவி கணேஷ், ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
படம் குறித்து ஸ்ரீநாத் கூறியது, ‘‘இது டார்க் காமெடி படம். வெவ்வேறு தொழில் செய்யும் நான்கு பேர், ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்றாக கூடுகிறார்கள். அப்போது ஒரு பரபரப்பான சம்பவம் நடக்க, அவங்களுக்கு என்ன நடக்கிறது, அதில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பது கதை . மணிகண்டன், சவுரி முடி விற்பராகவும், கருணாகரன், கிளி ஜோசியம் பார்ப்பவராகவும், நான் பேய் விரட்டுகிறவனாகவும், ரமேஷ் திலக் மிமிக்ரி பண்ணுகிறவராகவும் வருகிறோம்.
நான் விஜய்யின் நெருங்கிய நண்பன். இந்த படத்துக்கு விஜய் ஏன் உதவி செய்யவில்லை. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ரா தயாரித்த அலங்கு பட போஸ்டரை கூட வெளியிட்டாரே என்று பலர் கேட்கிறார்கள். உண்மையில் நான் அவரிடம் போய் எதையும் கேட்கவில்லை. அவரை வைத்து படத்துக்கு பப்ளிசிட்டி செய்ய வேண்டும் என்று ஆசைப்படவில்லை. நாம அவரை கட்டாயப்படுத்தக்கூடாது. நான் கேட்டால், கண்டிப்பாக செய்வார். ஒருவேளை வேறு சில சூழ்நிலை காரணமாக வேணாம் என்று சொல்லிவிட்டால் கஷ்டமாக இருக்கும்.
அவர் சினிமா, அரசியல் இரண்டிலும் பிஸியாக இருக்கிறார்.ஆனாலும், எங்கள் நட்பு தொடர்கிறது. அவரை அடிக்கடி சந்திக்கிறோம். ஜனவரி மாதம் அவர் ஆபீசில் அதிக நேரம் பேசினேன். சில தினங்களுக்கு முன்பு கூட போனில் பேசினார். அவர் நட்புக்கு மரியாதை கொடுக்கிறார். சரியான நேரம் அமைந்தால் தவெகவில் நான் சேருவேன்.வாட் ப்ரோ என அவர் சொல்வது டிரென்ட் ஆகி வருகிறது. அவருக்கு நடிகராக, நண்பராக, அரசியல் தலைவராக வெவ்வேறு முகம் இருக்கிறது. அதனால் அவரை தலைவர் என்று இப்போது பொது வெளியில் அழைக்கிறேன்.அதேசமயம், இந்த படத்தை அவருக்கு காண்பிப்பேன். ஆனால், அவர் வெளிப்படையாக படம் குறித்து டுவிட் போடுவாரா என தெரியவில்லை.
தாம்துாம் படத்துல நான் வொர்க் செய்தேன். அந்த படத்துல ஹீரோயினாக நடித்தவர் கங்கனா ரணாவத். அந்த சமயத்தில் எனக்கு நன்றாக ஆங்கிலம் தெரியும். அதனால் அவரிடம் நிறைய பேசுவேன். இன்றைக்கும் என் பெயரைதெரியும் அளவுக்கு நட்பு இருக்கிறது. அவர் இந்த படத்துக்காக பப்ளிசிட்டி பண்ணுவாரா என தெரியவில்லை. லெக்பீஸ் படத்துல நடித்த யோகிபாபு ரொம்பவே சப்போர்ட் செய்தார். சம்பளத்தை குறைத்தார். எனக்காக பல விஷயங்களை தள்ளி வைத்துவிட்டு கால்ஷீட் கொடுத்தார். மலேசியா ட்ரீப்பை தள்ளி வைத்துவிட்டு டப்பிங் பேசினார்.’’