ஷாம் நடித்த அஸ்திரம் படம், மார்ச் 7ம் தேதி ரிலீஸ். இதையொட்டி சென்னையில் அவர் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் குறித்து பல விஷயங்களை கூறியுள்ளார். அவர் பேசியது
“பேஸ்புக் மூலம் அறிமுகமான அரவிந்த் ராஜகோபால் இந்த படத்தை இயக்கியுள்ளார். பல திரில்லர் படங்களை ரசித்து பார்த்து உள்ளோம். இந்தப் படத்தில் ஒரு தனித்துவமான கிரைம் இன்வெஸ்டிகேஷன் இருக்கிறது.படப்பிடிப்பு கொடைக்கானலில் ஒரே கட்டமாக 30 நாட்கள் நடந்தது. மாடலான நிரா இதில் ஹீரோயின். ஐரா, எட்டு தோட்டாக்கள், பொம்மை நாயகி ஆகிய படங்களுக்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
சினிமாவில் 12-பி படத்தின் மூலம் அறிமுகம் ஆனேன். வாரிசு திரைப்படம் எனக்கு ஒரு கம் பேக் படமாக அமைந்தது. அதற்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் இந்த ‘அஸ்திரம்’ படம் எனக்கு மிக முக்கியமான படம். வாரிசு படத்துக்கு பிறகு நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்க வேண்டும் என இருக்கிறேன். தற்போது துரை செந்தில்குமார், விஜய் ஆதிராஜ் ஆகியோரின் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். சிவகார்த்திகேயன் சினிமாவில் நுழைவதற்கு மிகப்பெரிய அளவில் போராடி வெற்றி பெற்று இருக்கிறார். சின்னத்திரையில் பங்கு பெற்று, பின்னர் சினிமாவுக்கு வந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது நல்ல இடத்தை பிடித்திருக்கிறார். எல்லோருக்கும் கால நேரம் என்று ஒன்று இருக்கிறது.
சிவகார்த்திகேயன் பங்கு பெற்ற ஒரு நிகழ்ச்சியில் நான் ஜட்ஜாக இருந்தேன். அப்போதே சிவகார்த்திகேயனிடம் பலமுறை சொல்லி இருக்கிறேன்.. உனக்குள் நல்ல திறமை இருக்கிறது.. நல்ல வாய்ப்பு கிடைத்தால் நீ பெரிய இடத்திற்கு செல்வாய்.. என் வீட்டில் மட்டுமல்ல.. மற்ற பல வீடுகளில் உள்ள குழந்தைகளை கவரும் திறமை உன்னிடம் இருக்கிறது என்று கூறி இருக்கிறேன். இன்று அவருடைய இந்த உயரம், வெற்றி மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் நான் அதை அப்போதே யூகித்த ஒன்றுதான். சிவகார்த்திகேயன் இப்போது பார்த்தாலும் கூட அன்றைக்கு நீங்கள் சொன்னீர்களே சார் என சொல்லுவார்.
கன்னட திரையுலகம் ரொம்பவே சின்ன திரையுலகம். ஆனால், அங்கே இருந்து கேஜிஎஃப், காந்தாரா என பான் இந்தியா வெற்றிப் படங்கள் வெளியாகி பெற்றுள்ளன. இன்று கன்னட மார்க்கெட், யஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் மூலம் உலகம் முழுவதும் சென்றுக் கொண்டிருக்கிறது. தெலுங்கில் பாகுபலி, புஷ்பா படங்களை பற்றி சொல்லவே தேவையில்லை. இந்திய பாக்ஸ் ஆபீஸிலேயே புதிய ரெக்கார்டை படைத்துள்ளன.