தமிழில் மார்ச் முதல் வாரம், அதாவது, மார்ச் 7ம் தேதி எத்தனை படங்கள் ரிலீஸ் ஆகிறது என்று விசாரித்தால், சற்றே கண்ணை கட்டுகிறது. ஆம், இந்த வாரம் 9 படங்கள் ரிலீஸ். அந்த படங்கள் குறித்த ஒரு பார்வை:
கிங்ஸ்டன்
கமல்பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்யபாரதி நடித்த ‘கிங்ஸ்டன்’ இந்த வாரம் வெளியாகும் பெரிய பட்ஜெட் படம், ஓரளவு பெரிய ஸ்டார் படம். துாத்துக்குடி கடல்புற பின்னணியில் கதை நகர்கிறது. கடலுக்குள் மீன் பிடிக்க செல்பவர்கள், ஜாம்பிகளால் தாக்கப்படுவது குறித்து விவரிக்கிறது. ஜாம்பிகளுக்கு எப்படி முடிவு கட்டினார் ஹீரோ என்பது கிளைமாக்ஸ்.இந்த படத்தை ஜி.வி.பிரகாசே தயாரித்து, இசையமைத்து இருக்கிறார்.
எமகாதகி
பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்க, பிரபல யூ டியூபர் நரேந்திரபிரசாத், புதுமுக நடிகை ரூபா நடித்து இருக்கிறார்கள். ஒரு இளம் பெண் இறந்துபோகிறாள். அவள் உடலை இறுதி சடங்கிற்காக வீட்டை விட்டு வெளியே எடுக்க முயற்சிக்கிறார்கள் உறவினர்கள். ஆனால், சில அமானுஷ்ய சக்தி காரணமாக, அந்த உடல் வீட்டை விட்டு வர மறுக்கிறது. அது ஏன். அந்த பெண் இறந்தது எப்படி என்பதை புது மாதிரி சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
ஜென்டில்வுமன்
ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில் லிஜோமோல்ஜோஸ், லாஸ்லியா, மெட்ராஸ் ஹரி நடித்த படம். தலைப்பிற்கு ஏற்ப, யார் ஜென்டில்வுமன், எதற்காக அவர் அப்படி அழைக்கப்படுகிறார் என்ற ரீதியில் கதை நகர்கிறது. லிஜோமோல், லாஸ்லியா ஆகியோர் வாழ்க்கையில் ஹரி எப்படி விளையாடுகிறார். அதனால், பாதிக்கப்பட்ட லிஜோமோல் என்ன செய்கிறார் என்று மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். கோவிந்தவசந்தா இசையமைத்துள்ளார்.
மர்மர்
ஜவ்வாதுமலையில் இருக்கும் கன்னிமார் மற்றும் சில அமாஷ்ய சக்திகளை படமாக்க செல்கிறார்கள் சில யூடியூப்பர்கள். அவர்களுக்கு என்ன நடக்கிறது. உண்மையில் அங்கே இருக்கும் அமாஷ்ய சக்தி யார்? என்ற ரீதியில் ஹேமந்த் நாராயணன் இயக்கியுள்ளார்.
நிறம்மாறும் உலகில்
பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் பாரதிராஜா, நட்டி, ரியோ, சாண்டிமாஸ்டர் உட்பட பலர் நடித்துள்ள 4 கதைகளின் தொகுப்பே இந்த படம். மும்பை, வேளாங்கண்ணி, துவரங்குறிச்சி கிராமம், சென்னை ஹவுஸிங் போர்டு பகுதிகளில் கதை நடக்கிறது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் இந்த 4 கதைகளை, கடைசியில் ஒரு புள்ளியில் இணைத்து இருக்கிறார்கள்.
லெக்பீஸ்
நடிகர் விஜய் நண்பரான ஸ்ரீநாத் இயக்கத்தில் யோகி பாபு , வி டி வி கணேஷ் , ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், ரமேஷ் திலக், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, சாம்ஸ் உட்பட பலர் நடித்த காமெடி படம் லெக்பீஸ். 5 ஆண்களை சுற்றி இந்த கதை நகர்கிறது.
அஸ்திரம்
அரவிந்த்ராஜகோபால் இயக்கத்தில் ஷாம், நிரா நடித்த படம். இது ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லர் துப்பறியும் கதை
இந்த படங்கள் தவிர விமல் நடித்த ‘படவா’, புதுமுகங்கள் நடித்த ‘அம்பி’ ஆகிய படங்கள் மார்ச் 7ம் தேதி வெளியாக உள்ளன.