திரைப்படத்துறையில் கலை இயக்குநராக பணியாற்றும் ஜீவா, புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு பங்களா ஒன்றில் தனது நண்பர்களுடன் சேர்ந்து ’ஸ்கேரி ஹவுஸ்’ என்று சொல்லக்கூடிய பயங்கரமான வீடு போன்ற ஒரு அரங்கத்தை உருவாக்கி, அதை பார்த்து ரசிக்க பார்வையாளர்களுக்கு அனுமதியளித்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார். மக்களிடம் சிறப்பான வரவேற்பை பெறும் அந்த பங்களாவில் நிஜமாகவே அமானுஷ்ய சக்திகள் இருப்பதோடு, அங்கிருந்து ஜீவாவை அந்த அமானுஷ்யங்கள் விரட்டியடிக்கிறது. அதே சமயம், அந்த பங்களாவில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதையும், தனக்கும் அந்த பங்களாவுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதையும் அறிந்துக் கொள்ளும் ஜீவா, அதன் முழு பின்னணியை தெரிந்துக்கொள்ள முயற்சிக்க, அது என்ன ? என்பதை திகில் கலந்த ஃபேண்டஸியாக மட்டும் இன்றி சித்தா மருத்துவம் மற்றும் சித்தர்களின் முக்கியத்துவதோடு சொல்வதே அகத்தியா.
ஜீவா கலை இயக்குனராக பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். கதைக்கு தேவையாக இருக்கும் அந்த மர்ம பங்களா மற்றும் ப்ளாஷ் பேக் காட்சியில் ஜீவாவின் உழைப்பு அளப்பரியது. கூடவே அர்ஜுன் வரும் காட்சியும் அதன் பின்ன்ணியும் ரசிக்கும்படி இருக்கிறது. அதுவும் பிரஞ்சு இளவரசியும், அவரது அண்ணன் வரும் காட்சிகள் அர்ஜுன் நடிப்பு பலரையும் கவர்ந்திருக்கிறது.
நமது இந்திய பாரம்பரிய வைத்தியத்திற்கு இருக்கும் மதிப்பும், அதை சிலர் எப்படி இரட்டடிப்பு செய்கிறார்கள் என்பதையும் திரைக்கதையில் சொல்லியிருப்பது படைப்பாளராக பா.விஜய் வெற்றி பெற்றிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ராஷி கண்ணா, படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை நாயகனின் காதலியாக வந்தாலும், அதற்கான எந்தவித காட்சியும் படத்தில் இல்லாதது அவருக்கு மட்டும் அல்ல ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றம்.
பிரெஞ்சு நாட்டு வாழ் தமிழராக சித்த மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுனின் அனுபவமான நடிப்பு மற்றும் திரை இருப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
எட்வர்ட் சோனென்ப்ளிக், மாடில்டா ஆகியோர் திரைக்கதையோட்டத்திற்கு ஏற்ப பயன்பட்டிருக்கிறார்கள். திணிக்கப்பட்ட கதாபாத்திரமாக நுழையும் ரெடின் கிங்ஸ்லி வலுக்கட்டாயமான வசனங்களை பேசி பார்வையாளர்களை எரிச்சலடைய செய்கிறார். செந்தில், யோகி பாபு, விடிவி கணேஷ் என கெளரவ வேடத்தில் நடித்திருக்கும் காமெடி நடிகர்கள் லேசாக சிரிக்க வைக்கிறார்கள்.
ஆரம்பத்தில் யுவன் சங்கர் ராஜாவின் பெயரை பார்த்ததும் உற்சாகமடையும் பார்வையாளர்களை அம்மா பாடல் மற்றும் ”என் இனிய பொன் நிலாவே…” ரீமிக்ஸ் மூலம் குஷிப்படுத்தும் யுவன், கதைக்கு ஏற்ப பின்னணி இசையமைத்திருக்கிறார்.
குழந்தைகளை கவரும் பல காட்சிகள் படத்தில் இருக்கிறது.