கோடை விடுமுறைக்கு அஜித் நடித்த குட்பேட் அக்லி, சூர்யா நடித்த ரெட்ரோ, கார்த்தியின் வா வாத்தியாரே வா, விஜய்சேதுபதி நடித்த டிரைன், விக்ரமின் வீரதீரசூரன் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதற்கிடையில் சில பழைய படங்களும் புத்தம் புது தொழில்நுட்பத்தில் வெளியாக தயாராகி வருகின்றன
குறிப்பாக, மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த எம்குமரன் சன்ஆப் மகாலட்சுமி மற்றும் ஜெயம் படங்கள் வெளியாக உள்ளன. ஜெயம்ரவி சினிமா வாழ்க்கையில் பெரிய வெற்றியை கொடுத்த இந்த படங்கள் ஏப்ரல், மேயில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. இந்த சம்மருக்கு விஜய் படம் இல்லை. ஆகவே, அவர் நடித்த சச்சின் படத்தை ரீ ரிலீஸ் செய்யப்போகிறார் கலைப்புலி எஸ்.தாணு. அதேபோல், ரஜினியின் சில படங்களும், எம்ஜிஆர், கமல் படங்களும் கோடையில் புது வடிவில் வருகின்றன. ஏற்கனவே, ஆட்டோகிராப்பை விரைவில் வெளியிட உள்ளதாக சேரனும் அறிவித்துள்ளார். பாட்ஷாவும் சம்மருக்கு வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டு ரீ ரீலீஸ் ஆன கில்லி படம் பெரிய வெற்றி பெற்றது. அந்த வகையிலும் பலரும் தங்கள் கைவசம் உள்ள அல்லது ரைட்ஸ் வாங்கி வைத்துள்ள பழைய படங்களை ரிலீஸ் செய்ய துடிக்கிறார்கள். புதுப்படங்கள் ஓடாத நிலையில், அதற்கு வரவேற்பு கிடைக்காத நிலையில், பழைய படங்களை வெளியிடலாம் என வினியோகஸ்தர்கள் நினைக்கிறார்கள். பழைய படங்களை ரிலீஸ் செய்தால் செலவு அதிகம் இல்லை. கொஞ்சம் பப்ளிசிட்டி செய்தால் போதும், படம் ஓடாவிட்டாலும் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படாது என்று நினைப்பதால், பழைய படங்களின் ரீ ரிலீசுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது.