தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் கே.ஜே.யேசுதாஸ். 1962 ஆம் ஆண்டு வெளியான ‘கால்பாடுகள்’ என்ற மலையாள படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமான யேசுதாஸ், தமிழில் ‘பொம்மை படத்தில் தனது முதல் பாடலை பாடினார். இதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழ் பாடல்களை அவர் பாடியிருக்கிறார்.
8 தேசிய விருதுகள் மற்றும் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்க மாநில அரசு விருதுகளையும் பெற்றுள்ளார். அவருக்கு 1975-ல் பத்மஸ்ரீ, 2002ல் பத்ம பூஷண் மற்றும் 2017ல் பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
85 வயதான யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான பிரச்சினையால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், ரத்த வெள்ளை அணுக்கள் தொடர்பான பிரச்சனைக்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் இன்று காலை செய்தி வெளியானது. இது கே.ஜே.யேசுதாஸின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. யேசுதாஸ் கூடிய விரைவில் நலம் பெற வேண்டும் என தங்களுடைய, பிராத்தனைகளையும் வாழ்த்துக்களையும் அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.