தமிழ்நாடுஅமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்திற்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், நிதிநிலை அறிக்கை குறித்த பல்வேறு விபரங்களை அத்துறையின் அதிகாரிகள் விளக்கிச் சொல்லியுள்ளார்கள். தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. வரும் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து கட்சிகளுக்கு கடிதம் அனுப்பப்போகிறோம்.
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவிற்கு மேல் மிகப்பெரிய கத்தி தொங்கிக்கொண்டுள்ளது. எல்லா வளர்ச்சிக் குறியிடுகளிலும் முதன்மை மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளது. அதைக் குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசு 2026ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதியை மறுசீரமைப்பு செய்ய இருக்கிறது. பொதுவாக இது மக்கள்தொகை கணக்கெடுப்பின்படிதான் செய்யப்படுகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது என்பது இந்தியாவின் மிக முக்கியமான இலக்கு. அந்த இலக்கில் தமிழ்நாடு வெற்றி பெற்றுள்ளது.,
தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தமிழகத்தில் 31 தொகுதிகள்தான் இருக்கும்; 8 தொகுதிகளை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும். நாட்டில் ஒட்டுமொத்த எம்பிக்களின் எண்ணிக்கையை உயர்த்தி அதற்கேற்ப பிரித்தாலும் நமக்கு இழப்புதான் ஏற்படும். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும்.
இதனால் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும். இது உறுப்பினர்களின் எண்ணிக்கை மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்தது. தமிழகத்தில் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து இந்த விவகாரத்தில் குரல் கொடுக்க வேண்டும்.
மீண்டும் ஒரு மொழிப்போருக்கு மத்திய அரசு வித்திடுகிறது, அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.