காதல் தோல்வியை கடந்து செல்ல முடியாமல் தவிக்கும் இளைஞன், பிரபு இவனுக்கு கால் கட்டு போட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றனர் இவனது பெற்றோர் இதற்காக அவன் பார்க்கும் பிரீத்தி கடைசியில் அவனது பள்ளி தோழியாக இருக்கிறார். இருவரும் பேசி பழக டைம் கேட்கின்றனர். திடீரென பிரபுவிற்கு அவனது முன்னாள் காதலியான நிலாவின் திருமண அழைப்பிதழ் வருகிறது. இதனால் தனது காதல் குறித்தும், காதல் தோல்வி குறித்தும் கதை சொல்ல ஆரம்பிக்கிறார் ஹீரோ.
பணக்கார பெண் நிலா-நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சமையல் கலை பயிலும் பிரபு, இருவரும் காதலிக்கின்றனர். இவர்களுக்கு இடையில் நிலாவின் பணக்கார அப்பா சரத்குமார் வில்லனாக வர, அங்கிருந்து இவர்களுக்கு பிரச்சனை ஆரம்பிக்கிறது. நிலாவின் நலனுக்காக பிரபு அவளை விட்டு பிரிய, இருவருக்கும் பிரேக்-அப் ஆகிறது.
இந்த கதையை கேட்கும் பிரபுவின் தோழி பிரீத்தி, திருமணத்திற்கு செல்லுமாறு பிரபுவிடம் சொல்கிறார். நிலாவுடன் வந்தால், அவளுடன் வாழ்க்கை, தனியாக வந்தால் பிரீத்தியுடன் வாழ்க்கை என்ற முடிவுடன் திருமணத்திற்கு செல்கிறான் ஹீரோ. நிலாவுக்கு யாருடன் திருமணம் நடந்தது? என்ற ஒரே ஒரு கேள்வியை நோக்கி மீதி கதை நகர்கிறது.
காதல், நட்பு,நண்பர்கள் அரட்டை, பார்ட்டி, ப்ரேக் அப் என்று படம் முழுவதும் இளமைக் கொண்டாட்டத்துடன் நகர்கிறது. நந்தவனத்துக்குள் சென்று வந்த மாதிரி ஒவ்வொரு ப்ரேமிலும் பெண்கள் பதுமைகளாக காட்டியிருக்கிறார் இயக்குனர் கதாசிரியர் தனுஷ். காதல் தோல்வி என்பதை தாண்டி இன்னொரு வாழ்க்கை இருக்கிறது என்பதையும், அதையும் வாழ்ந்து பார்க்கலாம் என்பதையும் அழகாக சொல்லியிருக்கிறார்.
ஆனால் எல்லாவற்றையும் எளிதாகக் கடந்து போகும் உணர்வு எவ்வளவு ஆபத்தானது என்றும் சில காட்சிகளில் காட்டியிருக்கலாம். இந்த இளம் தலைமுறைக்கு ஈடுகொடுத்து சரண்யா, நரேன் ஆகியோர் காட்சிகளில் அமர்க்களப்படுத்துகிறார்கள். படம் தொடங்கியதிலிருந்து க்ளைமேக்ஸ் வரைக்கும் படம் கலகலப்பாக செல்கிறது. இந்த தலைமுறையினரின்
பல்ஸ் பிடித்து திரைக்கதை எழுதியிருக்கும் தனுஷ் இயக்குனராக ஜெயித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பாடல்களை ரசிக்க முடிகிறது. அதோடு பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா P வாரியர், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன் சித்தார்தா ஷங்கர், ராபியா கதூன்
R சரத்குமார் என்று நடத்திர பட்டாளமே தனுஷ் கதைக்கு கைக்கொடுத்து உதவியிருக்கிறார்கள். லியான் பிரிட்டோவின் ஒளிப்பதிவும், பிரசன்னாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. 2 கே காதலில் எல்லாமே எளிதுதான் என்பது தெரிகிறது.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் – ஜாலி காதல் கலாட்டா