சிறு வயதில் நடந்த ஒரு அவமானத்தை மனதில் வைத்துக்கொண்டு, சிலரை கடத்தி கொடூரமாக கொலை செய்கிறான் ஒரு சைக்கோ கொலையாளி. அவனிடம் சிலர் சிக்குகிறார்கள். அவர்களை ஹீரோ காப்பாற்றினாரா என்பது டெக்ஸ்டர் படக்கதை.
புதுமுகங்கள் நடிக்க, சூரியன் ஜி. இயக்க, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் படம் வெளியாகிறது. சென்னையில் நடந்த படவிழாவி்ல் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தலைவரும், மூத்த இயக்குனருமான ஆர்.வி.உதயகுமார் பேசியது:
‘‘இப்போது சின்ன படங்கள் வெற்றி அடைகின்றன. நல்ல கதையம்சம் உள்ள படங்களை மக்கள் பார்க்கிறார்கள். அந்த காலத்தில் குறைவான தொழில்நுட்ப வசதியில் நல்ல படங்களை எடுத்தோம். இப்போது சினிமாவில் நிறைய வசதிகள் இருக்கிறது.
ஆனால், கன்டன்ட்தான் இல்லை. கதைக்குதான் பஞ்சம். சின்ன படங்களில் நல்ல கதைகள் வருகிறது. அந்த மாதிரி படங்களுக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். காரணம், படம் நல்லா இருக்குது என்று பேச்சு வருகிறது. ஆனால், அந்த படங்கள் தியேட்டரில் தொடர்ந்து ஓடுவதில்லை. அதற்குள் அதை துாக்கிவிடுகிறார்கள். படம் பிக்அப் ஆவதற்குள் அந்த படம் காணாமல் போகிறது. அதனால்தான், இப்பவெல்லாம் நல்ல படங்களுக்கு 3வது நாளே வெற்றி விழா நடத்தி, படத்தை பப்ளிசிட்டி செய்கிறார்கள். நல்ல படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. இதையெல்லாம் கடந்து சினிமாவை ஜெயிக்க வைப்பது கடினமான விஷயம். ஒரு காலத்தில் சினிமாவில் ஆட்டம் போட்டவர்கள் இன்று வாய்ப்பில்லாமல் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இன்றைக்கு சும்மா சுற்றிக்கொண்டு இருப்பவர்கள் நாளை கொடி கட்டி பறக்கலாம். அதற்கு சினிமாவை சுதந்திரமாக விட வேண்டும்’ என்றார்.
மூத்த த யாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில் ‘‘சினிமா விழாக்களில் சால்வை அணிவிக்கிற பழக்கத்தை விடலாம். அப்படியே சால்வை போட்டால், அதற்கு கைத்தறி ஆடைகளை பயன்படுத்தி, நம் நெசவாளர்களை வாழ வைக்க வேண்டும். வெளிநாடுகளில் காமெடி, கிரைம்ஜானர், காதல் என தனித்தனியாக படம் எடுப்பார்கள்.நம்மவர்கள் அனைத்தையும் மிக்ஸ் செய்து ஒரு படத்தை தருவார்கள். இது கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது’ என்றார்
நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில் ‘‘இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் படங்களில் பாடல், கதை அருமையாக இருக்கும். 2000வரை அந்த பாணி தொடர்ந்தது. 2 ஆயிரத்துக்குபின் பாடல்கள் கூட மாறிவிட்டது. முன்னணி ஹீரோக்களில் நடிக்கும் படங்களின் பாடல்களில் கூட வல்கர் அதிகமாகிவிட்டது. அதெல்லாம் ஸ்டெப்பா? இந்த படத்தில் பாடல் நன்றாக வந்துள்ளது. சினிமாவில் கமர்ஷியலுக்காக எதையும் திணிக்க கூடாது. அதை மக்கள் ரசிக்கமாட்டார்கள். சினிமாவுக்கு மொழி கிடையாது. ஆனாலும், தமிழ்சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தமிழகத்தில் இருக்கும் சினிமாகாரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும். தமிழகத்திலும் அழகான தமிழ் பெண்கள் இருக்கிறார்கள். ’’ என்றார்.