தன்ராஜ் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் அப்பா, மகன் சம்பந்தப்பட்ட பாசக்கதை ராமம் ராகவம். தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகி உள்ளது. இயக்குனரான தன்ராஜ் தெலுங்கில் பிரபல காமெடி, குணசித்திர நடிகர். அவரே சமுத்திரக்கனி மகனாக நடித்துள்ளார்
மகன் மீது உயிரை வைத்து அவனை பாசமாக வளர்க்கிறார் நேர்மையான அரசு அதிகாரியான சமுத்திரக்கனி. ஆனால், சில தவறான பழக்க வழக்கம், தவறான எண்ணத்தால் அப்பாவின் உயிரை எடுக்க பிளான் போடுகிறான் மகன். என்ன நடந்தது என்பது படத்தின் கதை. நேர்மையான, நல்லவர் என்றாலே சமுத்திரக்கனிதான் நினைவு வருவார். அந்த மாதிரி கேரக்டர் இந்த படத்திலும். பாசக்கார அப்பாவாக, நேர்மயைான அரசு அதிகாரியாக நடிப்பில் தனி முத்திரை பதித்து இருக்கிறார் சமுத்திரக்கனி. அவரின் டயலாக் டெலிவரி, பாடிலாங்குவேஜ் அவ்வளவு எதார்த்தமாக இருக்கிறது. குறிப்பாக, மகனின் தவறான செயல்களால் அவர் வருந்தும் காட்சிகள், கிளைமாக்சில் நான் சாக தயார் என்று சொல்லும் வசனங்கள் டச்சிங். சமுத்திரக்கனி நடித்த நல்ல படங்களில் ராமம் ராகவத்தை தாராளமாக சேர்க்கலாம்
அவர் மனைவியாக நடித்த பிரேமோதினி அக்மார்க் அம்மாவாக வாழ்ந்து இருக்கிறார். காதலியாக வரும் மோக்ஷா சில சீன்களில் காணாமல் போகிறார். ஹீரோ தன்ராஜ் நண்பராக வரும் ஹரிஷ் உத்தமன் நடிப்பு நாடகத்தனம். அதேசமயம், கதைநாயகனாக வரும் தன்ராஜ், நிஜத்தில் நாம் பார்த்த பல மகன்களின் சாயலாக படத்தில் வருகிறார். பணத்தை இழந்து தத்தளிப்பது, அப்பாவை கொல்ல துடிப்பது, பின்னர் , தனது தவறை உணர்ந்து துடிப்பது என பல காட்சிகளில் மனதில் நிற்கிறார்.
படத்தின் வசனங்களும், அரசு அலுவலகம் சம்பந்தப்பட்ட சீன்களும் நேர்த்தியாக இருக்கிறது. ஆங்காங்கே சினிமாதனம், கொஞ்சம் நீளமான சீன்கள் இருந்தாலும், இன்றைய நிகழ்கால வாழ்க்கையில் நாம் பார்க்கும் சுயநலமிக்க மகன்களுக்கு இந்த படம் ஒரு பாடம். கிளைமாக்ஸ் இன்னும் அழுத்தமாக இருந்து இருக்கலாம்.