நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவது பற்றி விரைவில் அறிவிப்பேன் என்று அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் கூறியுள்ளார்.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்தவர் காளியம்மாள். அந்த தேர்தலில் காளியம்மாளின் அதிரடி பேச்சும், பிரச்சாரமும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அந்த தேர்தலில் தோல்வியடைந்தாலும், காளியம்மாள் செயல்பாடுகள் தொடர்ந்து கவனம் பெற்றது. தற்போது அவர் நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், காளியம்மாளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. காளியம்மாளை போனில் அழைந்து சீமான் திட்டிய ஆடியோவும் சில மாதங்களுக்கு முன் வெளியானது. ஆனால் அதற்கு பிறகு இருவரும் சமாதானம் ஆகிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கூறி வந்தனர்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த பிறகு, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பலரும் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர். அவர்களின் வரிசையில் காளியம்மாளும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையக்கூடும் என்று கூறப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் ஆதவ் அர்ஜுனா, சி.டி.நிர்மல் ஆகியோர் தவெகவில் இணைந்தபோது, அவர்களுடன் காளியம்மாளும் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காளியம்மாள் அதை மறுத்தார். தான் இன்னும் நாம் தமிழர் கட்சியிலேயே இருப்பதாக தெரிவித்தார். ஆனால் சீமானுடன் தொடர்ந்து மோதல் போக்கில் இருப்பதால் அவர் விரைவில் அக்கட்சியை விட்டு வெளியேறுவார் என்று கூறப்பட்டு வந்தது.
இந்த சூழலில் இன்று தூத்துக்குடி மாவட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கவுள்ள காளியம்மாள், அந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழில் நாம் தமிழர் கட்சியில் தான் வகிக்கும் பொறுப்பை தன் பெயருக்கு பின்னால் போடவில்லை. சமூக செயற்பாட்டாளர் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார். அதனால் அவர் அக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டதாக மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.