No menu items!

டிராகன் – விமர்சனம்

டிராகன் – விமர்சனம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப்ரங்கநான், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், மிஷ்கின் , கவுதம்மேனன் நடிப்பில் உருவான படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது.

தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் படிக்கும் ஹீரோ பிரதீப் ரங்கநாதன், அடாவடி மாணவராக இருக்கிறார். கெத்துக்காக அடிதடி செய்கிறார். ஆனால், 48 அரியருடன் கல்லுாரியை விட்டு வெளியேறுகிறார். ஒரு கட்டத்தில் போலி சான்றிதழ் கொடுத்து, கவுதம்மேனன் ஐடி நிறுவனத்தில் பெரிய சம்பளத்தில் வேலைக்கு சேருகிறார். அதை தெரிந்துகொண்ட கல்லுாரி முதல்வரான மிஷ்கின், ‘‘நீ மீண்டும் கல்லுாரிக்கு வரணும். 3 மாதத்தில் 48 அரியரை கிளியர் பண்ண வேண்டும். இல்லாவிட்டால், உண்மையை சொல்வேன்’’ என்று மிரட்டுகிறார். என்ன நடந்தது என்பது கதை.

லவ்டுடேவுக்குபின் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் அழுத்தமான கதை அம்சம் கொண்ட, பக்கா கமர்ஷியல் படம் டிராகன். அடாவடி கல்லுாரி மாணவராக, நண்பர்கள் அறையில் வெட்டியாக பொழுதை கழிப்பவராக, போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்பவராக, கடைசியில் மிஷ்கின் பிடியில் சிக்கி தவிப்பவராக, நடிப்பில் கலக்கியிருக்கிறார். அனுபமா பரமேஸ்வருடனான முதல் காதல், கயாடு லோகருடன் அடுத்த காதல் என காதல் காட்சியிலும் பின்னி எடுத்து இருக்கிறார். கிளைமாக்சில் பண்பட்ட நடிப்பில் மனதில் நிற்கிறார்.

கல்லுாரி முதல்வராக மிஷ்கினும், ஐடி கம்பெனி அதிகாரியாக கவுதம்மேனனும், ஹீரோ அப்பாவாக ஜார்ஜூம் நிறைவான நடிப்பை தந்து இருக்கிறார்கள். கிளைமாக்சில் பாசக்கார அப்பாவாக ஜார்ஜ் பேசுகிற வசனங்கள் டச்சிங். அனுபமாவும், கயாடு லோகரும் காதல் காட்சியில் கவர்கிறார்கள். ஹீரோ நண்பர்களாக வரும் விஜே சித்து டீம் அலப்பறைகள் அருமை.

ஒரு தவறான மாணவன் எப்படி திருந்துகிறான். தனது தவறை உணர்ந்து மனிதனாக மாறுகிறான் என்ற அழுத்தமான கருவும், அதற்கான சீன்களும் டிராகனை வெற்றி படமாக்குகிறது. முதற்பாதி சற்றே மெதுவாக நகர்கிறது. இரண்டாம் பாதி விறுவிறு. கல்லுாரி காட்சிகளும், காதல் காட்சிகளும் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

போலி சான்றிதழ் சம்பந்தப்பட்ட சீன்கள் சினிமாவுக்கு புதுசு. சிம்பு பாடிய பிரேக் அப் பாடல், லியோன் ஜேம்ஸ் இசை, படத்தை ரசிக்க வைக்கிறது. ஒரு தவறால், மற்றொரு மாணவன் எப்படி பாதிக்கப்படுகிறான். அதற்கு ஹீரோ செய்யும் பரிகாரம் ஆகியவை படத்தை பேச வைக்கிறது. இன்றைய இளைஞர்களுக்கு தேவையான காதல், காமெடி காட்சிகள், இன்றைய சமூகத்துக்கு தேவையான நீதி, அழுத்தமான காட்சிகள், கல்லுாரி மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என பலவற்றை கமர்ஷியலாக கொடுத்து டிராகனை வெற்றி படமாக்கி இருக்கிறார் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...