தனுஷ் இயக்கத்தில் பவிஷ், வெங்கடேஷ், மேத்யூ தாமஸ், அனிகா, ராபியா, ரம்யா உட்பட பலர் நடித்த படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’.ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சமையல் கலைஞரான பவிஷ், அனிகாவை காதலிக்கிறார். ஆனால், சில காரணங்களால் காதல் பிரேக் அப் ஆகிறது. பவிஷ், பிரியாவாரியருக்கு திருமண ஏற்பாடுகளை செய்கிறார்கள் பெற்றோர்கள். இதற்கிடையில், கோவாவில் நடக்கும் முன்னாள் காதலி அனிகா திருமணத்துக்கு, நண்பன் மேத்யூ தாமசுடன் செல்கிறார் பவிஷ். அங்கே என்ன நடந்தது. அனிகா திருமணம் நடந்ததா? பவிஷ் யாரை திருமணம் செய்தார் என்பதை காமெடி, காதல் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் தனுஷ்.
ஆரம்பம் முதல் கடைசிவரை கலர்புல்லாக, யூத்புல்லாக கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் தனுஷ். அதிலும் காமெடியையும் கலந்து ரசிக்க வைத்து இருக்கிறார். ஹீரோவாக நடித்தவர் தனுஷ் அக்கா மகன் பவிஷ். பல சீன்களில் தனுஷ் மாதிரியே இருக்கிறார். அவர் மாதிரியே வசனம் பேசுகிறார். காதல் காட்சிகளில், காதல் தோல்வி காட்சிகளில், காதலியின் திருமணத்தை பார்த்து ஏங்கும் காட்சிகளில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
ஹீரோயினாக வரும் அனிகா, இன்னொரு காதல் ஜோடியாக வரும் வெங்கடேஷ், ராபியாவும் தங்கள் கேரக்டரில் கலக்கியிருக்கிறார்கள். தனுஷ் நண்பனாக வரும் மேத்யூ வசனங்களும், காமெடியும் படத்துக்கு பெரிய பலம். இடைவெளிக்குபின் வரும் இன்னொரு ஹீரோயினான ரம்யாவும் பல காட்சிகளில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். ஹீரோயின் அப்பாவாக வரும் சரத்குமார், ஹீரோ அம்மாவாக வரும் சரண்யாபொன்வண்ணனும் மனதில் நிற்கிறார்கள். இன்றைய இளைஞர்களின் காதல், அவர்களுக்கு இடையேயான மோதல், காதல் தோல்வி ஆகியவற்றை வெகு எதார்த்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். ஜி. வி.பிரகாஷ் பின்னணி, இசை பாடல்கள் ‘நிலவை’மேலும் அழகாக்குகிறது. குறிப்பாக, கோல்டன் பாரோ பாடலும், பிரியங்கோ மோகனின் ஆட்டமும் இளசுகளை ஈர்க்கும்.