இயக்குனர் சேரனின் ஆட்டோகிராப் படம், 2004ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி வெளியாகி, 150 நாட்களை கடந்து, 75 தியேட்டர்களில் ஓடி சாதனை படைத்தது. தமிழ்சினிமாவின் முக்கியமான காதல் படங்களின் ஒன்றாக அமைந்தது. சேரனின் இயக்கம் மட்டுமல்ல, அவர் நடிப்பு, ஹீரோயின்களான சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா சம்பந்தப்பட்ட காட்சிகள், குறிப்பாக, படத்தின் கிளைமாக்ஸ் இன்றும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. பரத்வாஜ் இசையில் ஒவ்வொரு பூக்களுமே, ஞாபகம் வருதே, மனசுக்குள்ளே தாகம் போன்ற பாடல்கள் ஹிட்டாகின.
3 தேசியவிருதுகள், 3 மாநில அரசு விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை ஆட்டோகிராப் அள்ளியது. இன்றைக்கும் ஆட்டோகிராப் சீன்களும், வசனங்களும், காட்சிகளும் மீம்ஸ்களாக அவ்வப்போது வருகின்றன. பல்வேறு மொழிகளில் ஆட்டோகிராப் ரீமேக் ஆனது. சமீபத்தில் கூட பாடகி சித்ரா ஆட்டோகிராப் படத்தில் தான் பாடிய ஒவ்வொரு பூக்களுமே பாடல்கள் குறித்து சிலாகித்து பேசினார்.
இந்நிலையில், 21 ஆண்டுகளுக்குபின் வருகிற மே மாதம் ஆட்டோகிராப் படம் ரீ ரிலீஸ் ஆகிறது. அதற்கான வேலைகள் மளமளவென நடந்து வருகிறது. அதை முன்னிட்டு, ஆட்டோகிராப் படத்தின் டிரைலரை ஏ.ஐ வடிவில் வெளியிட்டுள்ளார் சேரன். ஏ.ஐ தொழில்நுட்பத்தில் சேரன், சினேகா, கோபிகா உள்ளிட்டோர் இளமையாக இருக்க, ஞாபகம் வருதே பாடல் ஒலிக்கும்படி அந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளத்தில் ஆட்டோகிராப் நவீன டிரைலரை வெளியிட்டுள்ளார்.