No menu items!

இது மரண கும்பமேளா – மம்தா பானர்ஜி

இது மரண கும்பமேளா – மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “மகா கும்பமேளா இப்போது மிருத்யு கும்பமேளா (மரண கும்பமேளா) ஆக மாறிவிட்டது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் ஏற்பட்ட கும்பமேளா கூட்ட நெரிசல் மரணங்களை சுட்டிக்காட்டி பேசிய மம்தா, விஐபிகளுக்கு சிறப்பு வசதிகள் வழங்கப்படும் நிலையில், எளிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

மேற்கு வங்க சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “இது மிருத்யு கும்பமேளா (மரண கும்பமேளா). நான் மகா கும்பமேளாவை மதிக்கிறேன். புனித கங்கை அன்னையை மதிக்கிறேன். ஆனால் இந்த கும்பமேளாவில் எந்தத் திட்டமிடலும் இல்லை. பணக்காரர்கள், விஐபிக்கள் ரூ.1 லட்சத்துக்கும் கூடாரங்கள் பெறுவதற்கு வசதிகள் இருக்கின்றன. ஆனால், ஏழைகளுக்கு கும்பமேளாவில் எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்படுவது சாதாரணமானதுதான். ஆனால், உரிய ஏற்பாடுகளை செய்து தருவது முக்கியமானது. நீங்கள் என்ன ஏற்பாடுகள் செய்திருந்தீர்கள்?

இவ்வளவு தீவிரமான நிகழ்ச்சியை ஏன் நீங்கள் மிகைப்படுத்தினீர்கள். சரியான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பின்பு கும்பமேளாவுக்கு எத்தனை கமிஷன்கள் அனுப்பப்பட்டன? கும்பமேளாவில் இறந்தவர்களின் உடல்களை உடற்கூராய்வு செய்யாமல் மேற்கு வங்கத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். மக்கள் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறி அவர்களுக்கு இழப்பீடும் மறுக்கப்படுகிறது. இறப்புச் சான்றிதழ் இல்லாமல் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டதால், நாங்கள் இங்கு அவற்றுக்கு உடற்கூராய்வு செய்தோம். இந்த மக்கள் எவ்வாறு இழப்பீடு பெறுவார்கள்?” என்று கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்பினார் மம்தா பானர்ஜி.

முதல்வரின் இந்தத் தாக்குதலுக்கு பாஜக உடனடியாக எதிர்வினையாற்றியுள்ளது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி “இது இந்துக்கள் மீதான தாக்குதல், மக்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பின்பு வெளியே போராட்டம் நடத்திய சுவாந்து அதிகாரி, “இதற்கு இந்து சமூகம், துறவிகள் சமூகம் தங்களின் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். சற்று நேரத்துக்கு முன்பு அவையில் முதல்வர் மம்தா பானர்ஜி, இது மகா கும்பமேளா இல்லை, மிருத்யு கும்பமேளா என்று கூறினார். இந்துக்களுக்கு எதிரான, கும்பமேளாவுக்கு எதிரான இந்தத் தாக்குதலுக்கு உங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்யுங்கள். நீங்கள் உண்மையான இந்துவாக இருந்தால், மம்தா பானர்ஜியின் இந்த வார்த்தைகளுக்கு எதிராக கடுமையாக எதிர்வினையாற்றுங்கள்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, ஜன.29-ம் தேதி கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக ஒரேநேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய நிலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தனர். அங்கு இரண்டாவதாக ஒரு கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்று கூறப்பட்டாலும், அதற்கான அதிகாரப்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை. அதேபோல், டெல்லி ரயில் நிலையத்தில் கும்பமேளா செல்வதற்கான ரயிலில் ஏறுவதற்காக சென்றபோது ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...