ஒரு தங்கம், ஒரு வெள்ளி என்று ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2 பதக்கங்களை பெற்றுத் தந்தவர் நீரஜ் சோப்ரா. ஈட்டி எறியும் வீரரான அவர், சில நாட்களுக்கு முன் ஹிமானி மோர் எனும் டென்னிஸ் வீராங்கனையை சிம்லாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.
செய்தியாளர்கள் யாரையும் அழைக்காமல் தன் நெருங்கிய உறவினர்களை மட்டும் தனது திருமணத்துக்கு நீரஜ் சோப்ரா அழைத்திருந்தார்.
இந்த சூழலில் தன் மனைவியைப் பற்றியும், திருமணத்தைப் பற்றியும் ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கார் நீரஜ் சோப்ரா.
“ஹிமானியை சிறு வயதில் இருந்தே எனக்குத் தெரியும். எங்கள் குடும்பத்துக்கும், ஹிமானியின் குடும்பத்துக்கும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நட்பு உண்டு. ஹிமானியின் குடும்பத்துக்கு விளையாட்டுத் துறையுடன் நெருங்கிய தொடர்ப்பு இருக்கிறது.
ஹிமானியின் அப்பா – அம்மா ஆகிய இருவரும் கபடி விளையாட்டு வீரர்கள். சகோதரர்கள் மல்யுத்தம் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளில் ஆடி வருகிறார்கள். ஹிமானிகூட ஒரு டென்னிஸ் வீராங்கனைதான். ஆனால் காயம் காரணமாக அவரால் அந்த விளையாட்டை தொடர முடியவில்லை. விளையாட்டை விட்டு படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினார்.
விளையாட்டுத் துறையில் ஆர்வம் என்பதால் எங்கள் குடும்பத்தினர் அடிக்கடி சந்தித்து வந்தனர். அப்போது நானும் ஹிமானியும் பேசிக் கொள்வோம். ஆரம்பத்தில் நாங்கள் சார்ந்த விளையாட்டைப் பற்றி மட்டுமே பேசினோம். ஆனால் நாளடையில் எல்லா விஷயங்களையும் பகிரத் தொடங்கினோம். எங்கள் நட்பு காதலாக மாறியது. நெருங்கிய சில உறவுகளைத் தவிர மற்றவர்களுக்கு எங்கள் காதல் பற்றி தெரியாது.
2025-ம் ஆண்டுக்கான சர்வதேச போட்டிகளுக்கு தயாராகும் முன் எங்கள் திருமணத்தை நடத்த விரும்பினோம். அதற்காகத்தான் ஜனவரியில் திருமணம் முடித்தோம். திருமணத்தை விரைவில் நடத்தவேண்டி இருந்ததால் பலரையும் எங்களால் அழைக்க முடியவில்லை. கொஞ்சம் பேரை மட்டும் அழைத்து திருமணத்தை முடித்தோம். வெகு விரைவில் அனைவரையும் அழைத்து ஒரு விருந்து கொடுக்க திட்டமிட்டு இருக்கிறோம்” என்று அந்த பேட்டியில் நீரஜ் சோப்ரா சொல்லியிருக்கிறார்.