தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை நளினி. சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை நளினி, 1980 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ‘ஒத்தையடி பாதையிலே’ என்ற படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.
ஆரம்ப காலகட்டங்களில் வருடத்திற்கு ஓரிரு படங்களில் நடித்து வந்த நளினி, அதன் பிறகு வருடத்திற்கு 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். அந்தளவிற்கு பிஸியான நடிகையாக சினிமாவில் கொடி கட்டி பறந்தார். இவர், ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லா ரோல்களிலும் நடித்துவிட்டார்.
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என்று தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் நளினி நடித்துள்ளார். சிங்கம் 3, அரண்மணை 3 போன்ற படங்களிலும் நளினி நடித்துள்ளார். இப்போது தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சாமந்தி என்ற தொடரில் நடித்து வருகிறார்.
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகரும், இயக்குநருமான ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நளினி மீது காதல் கொண்ட ராமராஜன் உதவி இயக்குநராக இருக்கும் போதிலிருந்தே அவரை காதலித்து வந்த நிலையில், அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். முதலில் அவரது காதலை பெரிதாக எடுத்துக் கொள்ளாத நளினி, அதன் பிறகு ராமராஜனின் உண்மையான காதலை புரிந்து கொண்டு காதலிக்க தொடங்கியுள்ளார். ஆனால், நளினிக்கு அவரது வீட்டில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. மேலும், ராமராஜனுக்கும் அடி, உதையும் விழுந்திருக்கிறது. இவர்களது காதலை சேரவிடக் கூடாது என்பதற்காக நளினியை தமிழ் சினிமாவில் நடிக்க வைக்காமல், தொடர்ந்து ஒரு வருடத்திற்கும் மேலாக மலையாள படங்களில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ராமராஜன் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நளினியை காரில் தூக்கி சென்று அவருக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நளினியின் அம்மா, நீ அவனுடன் வாழமாட்டாய், எப்படியும் திரும்பி வந்துவிடுவாய் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்படியே ராமராஜன் மற்றும் நளினியின் திருமண வாழ்க்கை 13 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்தது. 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் 2000 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
அப்படியிருந்தும் ஒருவர் மீது ஒருவர் இன்னமும் தீராத காதலுடன் தான் இருக்கிறார்கள். தன்னுடைய கணவர் ராமராஜனை தான் இன்னமும் காதலிப்பதாகவே நளினி பல நிகழ்ச்சிகளில் கூறி வருகிறார். இவர்களுக்கு அருணா, அருண் என இரட்டை குழந்தைகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நளினி தன்னுடைய விவாகரத்திற்கு பின் பட்ட கஷ்டங்கள் பற்றி பேசியிருக்கிறார்.
நடிக்க வந்ததை நினைத்து அழுத நளினி, விவாகரத்துக்கு பிறகு என்னுடைய குழந்தைகளை பாதுகாக்க, அவர்களுக்கு பிடித்தவற்றை செய்யவே எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அன்றைய சூழலில் என்னுடைய கஷ்டங்களை பகிர்ந்து கொள்ள கூட எனக்கு யாரும் இல்லை. இனி சினிமாவே வேண்டாம் என்று தான் நான் விலகியிருந்தேன். ஆனால், என்னுடைய குழந்தைகளுக்காக நான் மீண்டும் நடிக்க வந்தேன். திரும்பவும் ஏன் இதே சூழலை எனக்கு கொடுத்தாய் என தினமும், நான் வணங்கும் கருமாரி அம்மனிடம் முறையிட்டு அழுதிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.