காதலர் தினத்தை முன்னிட்டு, பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் படம் ‘காதல் என்பது பொதுவுடமை’. ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்க, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’, ‘ஜெய்பீம்’ படங்களில் நடித்த லிஜோ மோல் ஜோஸ், ரோகிணி, வினீத், தீபாசங்கர், அனுஷா நடித்துள்ளனர்.
தமிழில் காதல் குறித்து பல படங்கள் வந்திருந்தாலும், இந்த படம் இரண்டு பெண்களுக்கு இடையேயான காதலை, அதாவது லெஸ்பியன் உறவை, அதனால் ஏற்படும் பிரச்னைகள், குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை, தீர்வை பேசுகிறது.
லெஸ்பியன் உறவு குறித்து ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் பல படங்கள் வந்திருந்தாலும், தமிழுக்கு இது புதிது. இது குறித்து படக்குழு கூறியது
‘‘ரோகிணியின் மகள் லிஜோமோல். தனது காதல் பற்றி அம்மாவிடம் சொல்கிறார். லவ்லவரை வீட்டுக்கு அழைத்து வா என்கிறார். ஒரு நாள் லன்சுக்கு ஒரு இளைஞனும், பெண்ணும் வருகிறார்கள். அந்த பையன்தான் மகளின் காதலன் என்று நினைத்து, ரோகிணி பேசிக்கொண்டிருக்க, அந்த பெண்ணை நான் விரும்புகிறேன் என்று லிஜோமோல் சொல்ல, பிரச்னை வெடிக்கிறது. லிஜோமோல் அப்பா வினீத்தும் இந்த பிரச்னை, சிக்கல் குறித்து விவாதிக்கிறார்கள். என்ன நடந்தது. லிஜோமோல், அனுஷா அந்த ஜோடி சேர்ந்தார்களா? குடும்பத்தினர் சம்மதம் சொன்னார்களா என்பதை, ஆபாசம், விரசம் இன்றி கதையை சொல்கிறார் இயக்குனர். சென்சாரில் ஏ சான்றிதழ் கூட கொடுக்கவில்லை. அந்தளவுக்கு காட்சிகள் அமைந்துள்ளன.
இந்த படம் பல்வேறு கேள்விகளை, விவாதங்களை எழுப்புகிறது. தமிழில் எடுத்தால் இந்த வகை படம் ஓடாது என்று தடுத்தும், தமிழில் எடுத்து இருக்கிறார் இயக்குனர். இவர் இதற்குமுன்பு லென்ஸ், சமுத்திரக்கனி நடித்த தலைக்கூத்தல் படங்களை இயக்கியவர். செ ன்னை சாலிகிராமத்தில் ஒரு வீட்டில் முக்கியமான பல காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ’’ என்கிறது
வினீத் பேசுகையில் ‘‘ ஆவாரம் பூ, காதல்தேசம் என பல ஹிட் படங்களை கொடுத்தேன். இப்போது மலையாளத்தில் நிறைய படங்கள் பண்ணுகிறேன். தமிழில் மக்கள் மனதில் இடம் பெறும் கதைகளில் நடக்கிறேன். மே மாதம், சந்திரமுகி உள்ளிட்ட பல படங்கள் இன்றும் மக்கள் மனதில் நிற்கிறது. 33 ஆண்டுகள் ஆகிவிட்டநிலையிலும், ஆவாரம் பூ பற்றி மக்கள் பேசுகிறார்கள். அந்த படத்தில் இயக்குனர், நல்ல பாடல்களை கொடுத்த இளையராஜாவுக்கு நன்றி. அந்த மாதிரி இந்த படமும் பேசப்படும். இந்த மாதிரி கதையில் நான் நடித்தது இல்லை. ’’ என்றார்.