ஜெயம்ரவி, காஜல்அகர்வால் நடித்த ‘கோமாளி’ படத்தை இயக்கியவர் பிரதீப்ரங்கநாதன். அடுத்து ‘லவ்டுடே’ படத்தை இயக்கி, அவரே ஹீரோவாக நடித்தார். படம் பெரிய ஹிட். இப்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கும் ‘டிராகன்’ படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
பிப்ரவரி 21ம் தேதி படம் ரிலீஸாகும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சென்னையில் நடந்த பட விழாவில் பிரதீப் ரங்கநாதன் பேசியது
எனக்கும் தனுஷுக்கும் எந்த போட்டியும் இல்லை. நான் அவர் சாயலில் நடிக்கிறேன் என்கிறார்கள். மற்றபடி, எந்த பிரச்னையும் இல்லை. ‘டிராகன்’ படமும், தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படமும் ஒரே நாளில் வருகின்றன. இது திட்டமிட்டப்பட்டது அல்ல. பிப்ரவரி 14ம் தேதி ரிலீஸ் செய்யலாம் என நாங்கள் நினைத்தோம். விடாமுயற்சியால் அந்த தேதி தள்ளிப்போனது, அவர்களுக்கும் அப்படி நடந்து இருக்கலாம்.
கோமாளி ரிலீசுக்கு பின் சில முறை நான் தனுஷை சந்தித்து பேசியிருக்கிறேன். நானும் இந்த பட இயக்குனரும் 10 ஆண்டு நண்பர்கள். ஆனாலும், அதை மறந்துவிட்டு டிராகன் படத்தை சிறப்பாக எடுத்துள்ளோம்.லவ்டுடே என்ற வெற்றி படத்துக்குபின் டிராகன் வருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்போது 3 படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
படம் குறித்து பேசிய இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ‘‘நான் இயக்கிய ஓ மை கடவுளே வித்தியாசமான காதல் கதை. இதுவும் அப்படிதான். முதல் படத்தில் கணவன் மனைவி உறவு சிக்கல்களை பேசியிருந்தேன். இதில் எக்ஸ் கேர்ள் பிரண்ட்டை எப்படி நடத்தணும் என்பதை சொல்லியிருக்கிறேன். படத்தில் தம் அடிக்கும் காட்சிகள் இருக்கிறது. ஆனால், அது தவறு என்பதை படத்தின் சில சீன்கள் வலுவாக சொல்லும்.
ஒரு பாடலை சிம்பு பாடியுள்ளார். ஏன்டி விட்டுப்போன என்ற பிரேக் அப் பாடலை அவரை வைத்து பாட வைக்கலாமா? அவர் சம்மதிப்பாரா என யோசித்தோம். முதல்ல மாட்டேன்னு சொன்னார். அப்புறம் பாடிக் கொடுத்தார். அந்த பாடல் நன்றாக வந்துள்ளது.
என்னுடைய முதல் படத்தில் 2 ஹீரோயின்கள். இதிலும் 2 ஹீரோயின்கள். கதைக்கு தேவைப்படுவதால் இப்படி. படத்துல சில முத்தக்காட்சிகள் இருக்கிறது. கதைக்கு தேவைப்படுவதால் நிறைய இருக்கிறது. அந்த காட்சிகளுக்கு வலுவான பின்னணியும் இருக்கிறது. கல்லுாரி காலத்தில் கெத்தாக இருக்கும் மாணவர்கள், பின்னால் கஷ்டப்படுவார்கள். கல்லுாரியில் கெத்தாக இருப்பவர்கள் பின்னால் ஒரு கூட்டம் இருக்கும்.
அவருடன் நட்பு வைக்க பலர் ஆசைப்படுவார்கள். ஆனால், அவர்கள் வெளியில் வந்தபின் இயல்பு வாழ்க்கையில் கஷ்டப்படுவார்கள். அப்படி ஒரு மாணவனின் கதையை இதில் சொல்லியிருக்கிறேன். சக்சஸ்ன்னா என்ன என்பதை இந்த கதையில் சொல்கிறோம்.