ஆண்டுக்கு ரூ.3000 அல்லது 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 செலுத்தினால் நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் இல்லாமல் சென்று வரலாம் என்ற புதிய திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
சுங்க வசூலை ஒழுங்குபடுத்தவும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையாக, மத்திய அரசு தனியார் வாகன உரிமையாளர்களுக்கான இரண்டு புரட்சிகரமான புதிய சுங்கச் சாவடி கட்டண முறைகளை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது, ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் செலுத்துதல் அல்லது ஒரே ஒருமுறை மொத்தமாக கட்டணம் செலுத்துதல் என்ற புரட்சிகரமான புதிய திட்டத்தை விரைவில் அமலுக்கு வர இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு ரூ.3,000 அல்லது வாழ்நாள் கட்டணமாக 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் ரூ.30,000 கட்டணத்தை ஒரு முறை செலுத்தினால், நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தாமல் சென்று வரலாம்.
இந்த புதிய திட்டத்தின் மூலம் கட்டணம் செலுத்தி பெறப்படும் பாஸ்கள், ஃபாஸ்டேக் அட்டையுடன் ஒருங்கிணைக்கப்படும். இந்த திட்டம் அமலுக்கு வந்தால் அவ்வப்போது ஃபாஸ்டேக் ரீசார்ஜ் மற்றும் மாதாந்திர சுங்கச் சாவடி கட்டணங்கள் செலுத்துவதில் உள்ள சிரமத்தில் இருந்து விடுபட முடியும்.
இந்த திட்டம் அமலுக்கு வந்தால் தனியார் வாகன உரிமையாளர்களுக்கு மிகவும் சிக்கனமான மற்றும் தடையற்ற பயண அனுபவங்களை வழங்கும். அத்துடன் சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதும் தடுக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் நேரடியாக பயன்பெறுவர்.
தற்போது, தனியார் வாகன உரிமையாளர்கள் ஒரு மாதத்திற்கு ரூ.340 செலுத்தி உள்ளூர் பாஸ் பெறுகின்றனர், இதன் மூலம் எத்தனை முறை வேண்டுமானாலும் சுங்கச்சாவடிகளை கடந்து சென்று வரலாம். இதற்கு ஆண்டுக்கு ரூ.4,080 செலவாகும். இந்த திட்டத்தில் பயனடைந்து வருவோருக்கு ஆண்டுக்கு ரூ.3000 செலுத்தி பாஸ் பெறும் புதிய திட்டத்தின் மூலம் ரூ.1,080 மிச்சமாகும்.
அதேபோன்று, ஒரு முறை ரூ.30,000 கட்டணத்தை 15 ஆண்டுகளுக்கு வாழ்நாள் பாஸ் பெற்றுக் கொண்டால், நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தாமல் சென்று வரலாம். இதன் மூலம் சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதில் இருந்து விடுபட முடியும்.
அனைத்து சுங்கச் சாவடிகளிலும் தனியார் வாகனங்களின் பயன்பாடு 53 சதவிகிதமாக இருந்தாலும், அவை மொத்த சுங்க வருவாயில் 21 சதவிகிதமாகவே உள்ளன. மொத்த சுங்க வருவாயில் வணிக வாகனங்களினால் வரும் வருவாய் 74 சதவிகிதம் ஆகும். கடந்த ஆண்டு, தனியார் கார்கள் மூலம் ரூ.8,000 கோடி வருவாயை ஈட்டப்பட்டது. அதே நேரத்தில் நாட்டின் மொத்த சுங்க வருவாய் ரூ.55,000 கோடியாக இருந்தது.