“பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கான மக்களைப் போல நானும் பக்தி உணர்வால் நிறைந்தேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மகா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடும் பாக்கியத்தைப் பெற்றேன். இதன் மூலம், பக்தி உணர்வால் நிறைந்தேன் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மகா கும்பமேளா இந்த ஆண்டு பிரயாக்ராஜில் நடைபெற்று வருகிறது. பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை காலை புனித நீராடினார். புனித நீராடும்போது, ருத்ராட்ச மணிகளை பிரதமர் மோடி கையில் வைத்திருந்தார்.
ஆழ்ந்த ஆரஞ்சு நிற ஆடை அணிந்திருந்த பிரதமர் மோடி, சூரிய வழிபாட்டினை மேற்கொண்ட பிறகு, மந்திரங்களை உச்சரித்தவாறு கங்கையில் மூழ்கி புனித நீராடினார்.
திரிவேணி சங்கமத்தில் நடக்கும் புனித நீராடல் என்பது தெய்வீகத் தொடர்பின் ஒரு தருணம், அதில் பங்கேற்ற கோடிக்கணக்கான மக்களைப் போலவே நானும் பக்தி உணர்வால் நிறைந்தேன் என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன், கங்கை ஆற்றில் படகில் பயணம் செய்த பிரதமர் மோடி, புனித நீராடி, கங்கைக்கு ஆரத்தி காட்டி வழிபாடுகளையும் மேற்கொண்டார்.
பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 38.2 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனர்.
இந்த நிலையில், தில்லியில் இருந்து புதன்கிழமை காலை பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவுக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.