காதலர் தினத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் சில படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். பெரும்பாலும் காதல் சம்பந்தப்பட்ட படங்கள், யூத் சப்ஜெக்ட் படங்கள் ரிலீஸ் ஆகும். ஆனால், இந்த ஆண்டு காதலர் தினத்துக்கு ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
பிப்ரவரி 14ம் தேதி, அதாவது, அடுத்த வாரம், சுசீந்திரன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்த ‘2கேலவ்ஸ்டோரி’, சத்யராஜ், ஜெய் நடித்த ‘பேபி அன்ட் பேபி’, ஜே.எஸ்.கே சதீஷ்குமார் இயக்கத்தில் ரக் ஷிதா, சாக்ஷி அகர்வால், சாந்தினி நடித்த ‘பயர்’, ரோகிணி, லிஜோமோள், நிமிஷா நடித்த ‘காதல் என்பது பொதுஉடமை’ மற்றும் புதுமுகங்கள் நடித்த ‘வெட்டு’, விஜய் டிவி ராமர் நடித்த ‘அது வாங்கினா இது இலவசம்’ , ஸ்ரீகாந்த் நடித்த ‘தினசரி’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இந்த படங்களுடன் லேட்டஸ்ட்டாக, கவுண்டமணி கதைநாயகனாக நடித்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படமும் இது தவிர, ‘கேப்டன் அமெரிக்கா பிரேவ் நியூ வேர்ல்டு’ என்ற ஆங்கில படமும், தமிழில் டப்பாகி வர உள்ளது.
இந்த வாரம் அஜித்தின் ‘விடாமுயற்சி’ வெளியாவதால் தியேட்டர்கள் கிடைக்காத நிலை. அதனால், அடுத்த வாரம் இவ்வளவு படங்கள் ரிலீஸ். மார்ச் மாதம் பள்ளி, கல்லுாரி தேர்வு நேரம் என்பதால் தியேட்டருக்கு கூட்டம் வராது. அதனால், காதலர் தினத்தை முன்னிட்டு இத்தனை படங்கள் வெளியாவதாக கூறப்படுகிறது.
ஒருவேளை விடாமுயற்சி படம் நன்றாக இருந்து, அது ஹவுஸ்புல் ஆக ஓடினால், இந்த படங்களில் பல படங்கள் பின்வாங்கும் என்று கூறப்படுகிறது. பிப்ரவரி 14ம் தேதி இத்தனை படங்கள் வெளியானாலும் அனைத்தும் சின்ன பட்ஜெட் படங்கள் மற்றும் புதுமுக நடிகர்கள் நடித்த படங்கள். அதனால், இந்த படங்களுக்கு எப்படி வரவேற்பு இருக்கும் என்று கணிக்க முடியவி்ல்லை.