இயக்குனர் பாரதிராஜா இப்போது பிஸியான நடிகர் ஆகிவிட்டார். கடந்த சில ஆண்டுகளாக குரங்குபொம்மை, படைவீரன், கள்வன், திருச்சிற்றம்பலம் உட்பட பல படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு அவர் நடித்த மகாராஜா படம், ரூ 100 கோடியை தாண்டி வசூலித்தது. சமீபத்தில் வெளியான திரு.மாணிக்கம் படத்திலும் குணசித்திர கேரக்டரில் நடித்து இருந்தார். இப்போது ‘நிறம் மாறும் உலகில்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்
அந்த படம் குறித்து, இயக்குனர் பிரிட்டோ ஜே.பி கூறுகையில் ‘‘பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ் , சாண்டி கூட்டணியில் உருவாகும் படம் ‘நிறம் மாறும் உலகில் ‘. இவர்களை தவிர, விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர்,’ஆடுகளம்’ நரேன், மைம் கோபி , வடிவுக்கரசி ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள், அதை இணைக்கும் ஒரு புள்ளி என நம் வாழ்வில் உறவுகளின் அவசியத்தை உணர்வுபூர்வமாக விவரிக்கும் கமர்சியல் படமாக நிறம் மாறும் உலகில் உருவாகி இருக்கிறது. மும்பை, வேளாங்கண்ணி , சென்னை, திருத்தணி ஆகிய இடங்களில் கதை நடைபெறுகிறது. படப்பிடிப்பு முடிந்தநிலையில், விரைவி்ல் படம் ரிலீஸ்’ என்கிறார்
திருச்சிற்றம்பலம், கள்வன், திரு.மாணிக்கம் போன்ற படங்களில் பாரதிராஜா நடிப்பை பார்த்துவிட்டு, பல இளம் இயக்குனர்கள் அவரை நடிக்க வைக்க நினைக்கிறார்கள். ஆனால், அவரோ உடல்நிலை, வயதை கருத்தில் கொண்டு ஓரிரு படங்களை மட்டுமே தேர்ந்தெடுக்கிறார். அதிலும் கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருப்பதால் அதிக படங்களில் நடிப்பதில்லை.