அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் வீரதீரசூரன் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பட வேலைகள் பாக்கி இருப்பதால் ஜனவரி இறுதி வெளியாக வாய்ப்பு என்று கூறப்பட்டது. ஏனோ அதுவும் நடக்கவில்லை. பிப்ரவரியில் படம் ரிலீஸ் ஆகியே தீரும் என்றார்கள். ஆனால், இப்போது மார்ச் 27ம் தேதி படம் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் இவ்வளவு தாமதம் என்று விசாரித்தால் ‘‘அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடித்த சித்தா பெரிய வெற்றி. அதை தொடர்ந்து அவர் இயக்கும் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டாலும் பெரியளவில் லாபத்தை ஈட்டவில்லை. அதனால், பெரிய வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விக்ரம் இருக்கிறார். வீர தீர சூரன் நன்றாக வந்து இருப்பதால் போஸ்ட் புரடக் ஷன் பணிகளில் அதிகம் கவனம் செலுத்த இயக்குனருக்கு உத்தரவிட்டு இருக்கிறார்.
பிப்ரவரியில் வருவதை விட மார்ச் இறுதியில் வந்தால் அடுத்த இரண்டு மாதம் பள்ளி, கல்லுாரி லீவு காரணமாக கூட்டம் அதிகம் வரும். அது சரியான நேரம் என்று நினைக்கிறார். ஆகவே, மார்ச் 27ம் தேதி படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதில் விக்ரம் ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ்க்கு முக்கியமான வேடம். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
பொதுவாக ஒரு படத்தின் முதல்பாகம் வந்தபின்னர், 2வது பாகம் வரும். ஆனால், வீர தீர சூரனை பொறுத்தவரையில் முதலில் 2வது பாகம்வருகிறது. விரைவில் முதல் பாகம் வர உள்ளது. கதை அமைப்பு அப்படி. காந்தாரா படமும் இப்படிதான் வர உள்ளது.