கடந்த வாரம், சென்னையில் நடந்த ‘பாட்டல் ராதா’ பட விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசியது சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. அந்த ஆபாச பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேடை நாகரீகத்தை மறந்து இப்படி வாய்க்கு வந்தபடி மிஷ்கின் பேசலாமா? சமீபகாலமாக மைக் பிடித்தால் ஏதேதோ பேசுவது மிஷ்கினுக்கு வாடிக்கை ஆகிவிட்டது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கொதித்தனர்.
ஆனாலும், அன்றைய மேடையில் இருந்த சினிமா பிரபலங்கள், சினிமா சங்கங்கள் மிஷ்கின் கண்டனம் தெரிவிக்கவில்லை. அந்த பேச்சை கேட்ட நெட்டிசன்கள் மிஷ்கினை திட்டி தீர்த்தனர். இந்நிலையில் சினிமாகாரர்களும் மிஷ்கினுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கிவிட்டனர். சென்னையில் நடந்த சுசீந்திரனின் ‘2கே லவ் ஸ்டோரி’ பட டிரைலர் வெளியீட்டு விழாவில் நேரடியாக மிஷ்கினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார் நடிகர் அருள்தாஸ்.
அவர் பேசுகையில் ‘‘ இயக்குனர் மிஷ்கின் சகட்டுமேனிக்கு வாடா, போடா என்று பேசுகிறார். அவர் பேச்சு சரியில்லை. பாலா 25வது ஆண்டு விழாவில் அவரை ‘அவன் இவன்’ என்று மரியாதை இல்லாமல் பேசினார். இசைஞானி இளையராஜாவையும் அப்படி பேசுகிறார். யார் நீ. தமிழ்சினிமாவில் அவ்வளவு பெரிய அப்பா டக்கரா? அவர் போலி அறிவாளி, உலக சினிமா மற்றும் ஆங்கில படங்களை காப்பி அடிப்பவர். அன்றைக்கு மேடையில் இருந்த அமீர், வெற்றிமாறன் போன்றவர்கள் பெரிய அறிவாளி. அந்த மேடை அறுவறுப்பாக இருந்தது. உங்கம்மா, எங்க அம்மா இல்லை. இது சினிமா. நீங்க முக்கியமான படம் பண்ணவில்லை. மண் சார்ந்த படம் பண்ணவில்லை. இப்படி மேடைகளில் பேசாதீர்கள். மற்றவர்களை குடிகாரர்கள் என்ற ரீதியில் பேசாதீர். நீங்க அதை பார்த்தீர்களா? ஊற்றி கொடுத்தீர்களா? இனி அந்த பேச்சை அனுமதிக்க கூடாது’’ என்றார்.
அடுத்து பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயனும் மிஷ்கினை வறுத்தெடுத்தார். அவர் பேசுகையில் ‘‘ நமக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காதோ என்று நினைத்து, பயந்து சிலர் மிஷ்கினை கண்டிக்க மறுக்கிறார்கள். நாம் பேசுவது மற்றவர்களை காயப்படுத்தக்கூடாது. பாசிட்டிவ் ஆக பேச வேண்டும். அது நடக்காவிட்டால் , நாம் வாயை மூடிக்கொள்ள வேண்டும். பாசிட்டிவ் ஆக பேசுவது, நினைப்பது ரொம்ப கஷ்டம். ஆனால், நெகட்டிவ் ஆக பேசுவது. மற்றவர்களை காயப்படுத்துவது, அவமானப்படுத்துவது ரொம்ப ஈஸி. அப்படி யார் பேசினாலும் தவறு. அப்படி யாராவது பேசினால், அந்த மேடையில் இருப்பவர்கள் கண்டிக்கணும். அந்த மேடையில் இருந்து ஒரு இயக்குனர் வெளியேறினார். இதை அனுமதித்தால் தொடர்ந்து, இப்படி பலர் பேசுவார்கள். மேடை தவறாகிவிடும். அவ்வளவு ஆபாசமாக மிஷ்கின் பேசியது தவறு. மிஷ்கினின் அந்த முழு பேச்சு 32 நிமிடங்கள். அதில் 4 நிமிடங்கள் மட்டுமே தவறான பேச்சு. மற்ற 28 நிமிடம் நல்ல பேச்சு. எனவே, இனியாவது மிஷ்கின் நல்ல விதமாக பேசணும்’’ என்றார்