மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அவ்வப்போது பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து சென்றாலும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.
அதனைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் இரவு நேரங்களில் மாடுகளை பிடிக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. கடந்த 2023-ம் ஆண்டு மட்டும் 4 ஆயிரத்து 237 மாடுகளை பிடித்து, ரூ.92 லட்சத்து 4 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு 2 ஆயிரத்து 427 மாடுகள் பிடிக்கப்பட்டு, ரூ.1 கோடியே 30 லட்சத்து 71 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, முதல்முறை பிடிபடும் மாடுகளுக்கு ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாகவும், 2-வது முறையாக பிடிபடும் மாடுகளுக்கு அபராத தொகை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாகவும் மாநகராட்சி உயர்த்தியது. முதல்முறை பிடிபடும் கால்நடைகளை அடையாளம் காண கால்நடைகளின் உடலில் சிப் பொருத்தவும் திட்டமிட்டிருந்தது.
இருப்பினும் மாடுகள் சாலையில் சுற்றி திரிவது தொடர்ந்தது. இந்நிலையில் கால்நடை வளர்ப்போர் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி சார்பில் 15 இடங்களில் மாட்டு கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக கால்நடை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், மாநகராட்சி நிர்வாகத்தை அணுகி, மாட்டு கொட்டகைகளை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஒரு மாட்டுக்கு 4 அடி அகலம், 10 அடி நீளம் அளவில் இடம் ஒதுக்க வேண்டும். மாட்டு கொட்டகைகளுக்கான மின்சாரம், குடிநீர் கட்டணம், பராமரிப்பு கட்டணம், வரி, கழிவுநீர் கட்டணம் ஆகியவற்றை நாங்களே ஏற்றுக்கொள்கிறோம். ஒரு மாட்டுக்கு வாடகையாக தலா ரூ.50-ம் மாநகராட்சிக்கு செலுத்துகிறோம் என கோரிக்கை விடுத்திருக்கிறோம்.