‘வணங்கான்’ படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இப்பட்த்தில் பணியாற்றிய கலைஞர்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு இயக்குநர் பாலா அளித்த பதில்கள்…
நீங்க பாலுமகேந்திராவின் சிஷ்யர். ஆனால், உங்கள் படங்களில் வன்முறை அதிகமாக இருக்கிறதே?
“அது என் ரத்தத்தில் இருக்கிறது.”
பாலுமகேந்திராவின் சிஷ்யர்களான நீங்கள், சீமான், ராம், வெற்றிமாறன் போன்றவர்கள் நல்ல நிலையில் இருக்கீங்க. குருநாதரை மறந்திட்டீங்களே, சென்னையில் ஒரு தெருவுக்கு கூட அவர் பெயர் இல்லையே?
“அவரை மறக்க மாட்டோம் அவர் எங்களுக்குள் இருக்கிறார். நாமே ஒரு தெருவை உருவாக்கி, அதற்கு பெயர் வைக்க முடியாது. அதற்கு நிறைய விதிகள் இருக்கின்றன. அரசுதான் அதை செய்ய வேண்டும்.”
வணங்கான் கதை எப்படி உருவானது?
“சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த உண்மை சம்பவம் இது. அந்த பள்ளியின் பெயரை சொல்லமாட்டேன். என் படங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். காரணம், அவர்கள் நம்மை நம்பிதானே இருக்கிறார்கள். நான் கோபக்காரன் இல்லை. படப்பிடிப்பு தளத்தில் முகம் சுளித்தது இல்லை. அது பற்றி தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி, ஹீரோ அருண்விஜயிடம் கேட்டுபாருங்க, அது புரியும்.”
விஷாலுக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவன் இவனில் படத்தில் அவரை நீங்க அவரை மாறுகண் தோற்றம் உடையவராக நடிக்க வைத்ததால்தான், முதலில் அவருக்கு பிரச்னை ஏற்பட்டது. இப்போதைய பிரச்னைக்கு அடித்தளம் அதுதான் என்று சொல்லப்படுகிறதே?
‘‘நான் அதற்கு டாக்டர் சர்ட்டிபிகேட்தான் வாங்கி தரணும். என்னால் எந்த பிரச்னையும் இல்லை. இது கூட பரவாயில்லை. ஒருவர் யூடியூப்பில், நான் விஷால் கண்களை தைத்துவிட்டேன்னு பேசியிருக்கிறார். அப்படி செய்ய முடியுமா. அவரவருக்கு தோன்றுவதை பேசுறாங்க. அப்படி பேசுபவர்கள் பற்றி நான் கவலைப்படவில்லை.’
‘‘பெரியார் குறித்து சீமான் பேசியது பற்றி?
”நான் அதை கேட்கவில்லை. வணங்கான் உட்பட எந்த படத்திலும் நான் கிறிஸ்துவ மதத்தை கிண்டல் செய்யவில்லை. வணங்கான் படத்தில் அந்த தங்கச்சி கேரக்டர், சர்ச்சில் ஒரு பாட்டு பாடும். அதை கேட்டாலே உங்களுக்கு உண்மை புரியும்’’
நீங்க ஏன் மணிரத்னம் மாதிரி, கவுதம்மேனன் மாதிரி ஸ்டைலிஷ் ஆக படம் எடுப்பதில்லை?
‘‘நீங்க ஒரு கதை கொடுங்க, அதை பண்ணலாம்’’
இவ்வாறு இயக்குநர் பாலா பதிலளித்தார்.