No menu items!

டிரம்ப்பின் முதல்நாள் அதிரடிகள் – என்னெவெல்லாம் செய்தார்?

டிரம்ப்பின் முதல்நாள் அதிரடிகள் – என்னெவெல்லாம் செய்தார்?

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று இரவு பொறுப்பேற்றார். டிரம்பின் பதவியேற்பு விழாவில் உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள், தொழிலதிபர்கள், அமெரிக்க முன்னாள் அதிபர்களான பாரக் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி வெற்றி பெற்றார். அமெரிக்காவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்பது வழக்கம். அதன்படி இன்று அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனல்ட் ட்ரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடல் அரங்கில் பதவியேற்றார். அவருடன் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜேடி வான்ஸும் பதவியேற்றுக் கொண்டார்

அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கியுள்ளது

பதவியேற்பு விழாவில் பேசிய டொனால்ட் டிரம்ப், “அமெரிக்காவின் பொற்காலம் தற்போது முதல் தொடங்கியுள்ளது. இதுவரையில்லாத வகையில், ஒரு வலிமையான அமெரிக்காவை நான் கட்டமைப்பேன். இந்த நாளில் இருந்து அமெரிக்கா செழித்து, வளரும். உலக நாடுகள் முழுவதும் மதிக்கப்படும். அமெரிக்கர்களின் பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும்” என்றார்.

பிரதமர்மோடி வாழ்த்து

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றுள்ள எனது அன்பு நண்பர் அதிபர் டொனால்டு டிரம்பிற்கு வாழ்த்துகள். இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையிலும், உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையிலும் மீண்டும் ஒருமுறை நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன். உங்கள் எதிர்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

டிரம்பின் அதிரடி நடவடிக்கைகள்

அதிபர் பதவியை ஏற்றது முதல் பல்வேறு அதிரடிகளை டிரம்ப் செய்து வருகிறார்.

அதிபர் பதவியை ஏற்ற ஒரு நாளைக்குள் அதிபர் டிரம்ப் செய்துள்ள சில அதிரடிகள்…

உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்ப் முதல் முறையாக அதிபராக இருந்த போதும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேற கையெழுத்திட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பைடன் அதிபர் ஆனதும் அதில் மீண்டும் அமெரிக்கா இணைந்தது. தற்போது அமெரிக்கா அதிலிருந்து மீண்டும் வெளியேறி உள்ளது.

அமெரிக்காவில் டிக்டாக் செயலி மீதான தடையை 75 நாட்கள் தாமதப்படுத்தும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் வகையில் அதை தேசிய அவசர நிலையாக அறிவிக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றத்தை குறைந்தது நான்கு மாதங்கள் வரை நிறுத்தி வைக்கவும் முடிவு செய்துள்ளார்.

பிறப்புரிமை அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்யும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். மேலும், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் யாரேனும் ஒருவர் நிரந்தர அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தால் மட்டும் அந்த குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முந்தைய அதிபர் ஜோ பைடனின் ஆட்சி நிர்வாகத்தில் அமல் செய்யப்பட்ட சுமார் 78 நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எல்ஜிபிடிக்யூ+ சமூகத்தினருக்கு முந்தைய ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட உரிமைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. .

அமெரிக்காவின் வெளிநாட்டு மேம்பாட்டு உதவித் திட்ட பொறுப்பாளர்களாக உள்ள அனைத்து துறை மற்றும் நிறுவனத் தலைவர்களும் உடனடியாக மேம்பாட்டு நிதி உதவி வழங்குவதை நிறுத்த வேண்டும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 1-ம் தேதி முதல் கனடா மற்றும் மெக்சிகோ மீது 25 சதவீத இறக்குமதி வரி விதிக்கப் போவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பத்திரிகையாளர்களை சந்தித்த போது தெரிவித்தார். அதே நேரத்தில் சீனாவுக்கு 60 சதவீத வரி விதிப்பது குறித்து அவர் எதுவும் பேசவில்லை.

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதைத் தொடர்ந்தால் தனது தலைமையிலான நிர்வாகம் அதே அளவிலான வரியினை இந்திய பொருட்களின் மீது விதிக்கும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...