‘பரந்தூர் பகுதி மக்களுக்கு நான் உறுதுணையாக இருப்பேன். என்னுடையக் கள அரசியல் பயணம் இங்கிருந்துதான் தொடங்குகிறது. பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக சட்டத்திற்கு உட்பட்டு எல்லா போராட்டங்களையும் நடத்துவோம். உறுதியாக நிற்போம்” என்று தவெக தலைவர் நடிகர் விஜய் பேசியுள்ளார்.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில், சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 900 நாட்களுக்கும் மேலாக ஏகானாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டில் பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என தீர்மானமும் நிறைவேற்றினார். அதைத்தொடர்ந்து, பரந்தூர் கிராம மக்களை சந்திக்க விஜய் முடிவு செய்தார். அதற்காக, தமிழக டிஜிபி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் அனுமதி கோரப்பட்டது. அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து தவெக தலைவர் விஜய், இன்று பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மக்களை ஏகானாபுரத்தில் சந்தித்தார்.
இதற்காக பனையூரில் இருந்து இன்று காலை பிரச்சார வாகனத்தில் புறப்பட்ட விஜய் பரந்தூர் ஏகனாபுரம் வருகை தந்தார். அவர் வரும் வாகனத்தை தொண்டர்கள் சூழ்ந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். விஜய் தனது கட்சி கொடியை ஏந்தியபடி தொண்டர்களை பார்த்து கையசைத்து மண்டப வளாகத்திற்குள் நுழைந்து, பிரச்சார வேனில் நின்றபடி, மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய விஜய், “விமான நிலையம் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. வளர்ச்சிக்கு நான் எதிரானவன் இல்லை. பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்று தான் நான் கூறுகிறேன். பரந்தூரில் விமான நிலையத்தை அமைத்து, சென்னையை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் திட்டத்தை நான் எதிர்க்கிறேன். சென்னை மழை வெள்ளத்தில் தத்தளிப்பதே, இங்குள்ள நீர் நிலைகள் அழிக்கப்பட்டதால்தான் என சமீபத்திய ஆய்வு சொல்கிறது. பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என ஒன்றிய, மாநில அரசைக் கேட்கிறேன். விவசாய நிலங்கள் இல்லாத பகுதியில் விமான நிலையத்தை அமைக்க வேண்டும். வளர்ச்சி திட்டங்களுக்காக விவசாயத்தை அழிக்கக் கூடாது.
அரிட்டாப்பட்டி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த தீர்மானத்தை நான் வரவேற்கிறேன். ஆனால், அதே நிலைப்பாடுதான் பரந்தூர் விவகாரத்திலும் எடுத்திருக்க வேண்டும். அரிட்டாப்பட்டியில் டங்க்ஸ்டன் வேண்டாம் என முடிவெடுத்த அரசு பரந்தூர் விமான நிலையம் வேண்டாமென ஏன் சொல்லவில்லை? பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மறுஆய்வு செய்ய வேண்டும்.
பரந்தூர் பகுதி மக்களுடன் நானும், தவெக தோழர்களும் உறுதுணையாக இருப்பார்கள். என்னுடையக் கள அரசியல் பயணம் இங்கிருந்துதான் தொடங்குகிறது. பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக சட்டத்திற்கு உட்பட்டு எல்லா போராட்டங்களையும் நடத்துவோம். உறுதியாக நிற்போம். நீங்கள் எல்லோரும் உங்கள் ஊர் கிராம தேவதைகளான கொல்லமெட்டாள் அம்மன் மீதும் எல்லையம்மன் மீதும் ரொம்பவே நம்பிக்கை வைத்துள்ளீர்கள் என்பது எனக்குத் தெரிந்தது, அந்த நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். நம்பிக்கையோடு இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்,” எனப் பேசியுள்ளார் விஜய்.
விஜய் பேச்சுக்கு, அங்கு கூடியிருந்த மக்கள் உற்சாக ஆரவாரம் செய்தனர்.