பா.ரஞ்சித் தயாரிப்பில், தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் குரு.சோமசுந்தரம், சஞ்சனா, ஜான் விஜய், மாறன் நடிக்கும் படம் ‘பாட்டல் ராதா.’ குடி நோயாளிகளின் பிரச்னைகள், மனநிலை, அவர்களின் குடும்பத்தின் சந்திக்கும் கஷ்டங்களை இந்த கதை விவரிக்கிறது. சென்னையில் நடந்த இந்த பட டிரைலர் வெளியீட்டுவிழாவில் நானும் குடிபழக்கம் உள்ள அப்பாவால் பாதிக்கப்பட்டேன். ஒரு சமயம் சில தவறான முடிவுகளை எடுக்கலாம் என்று கூட யோசித்தேன் ’ என்று இயக்குனர் பா.ரஞ்சித் உருக்கமாக பேசியுள்ளார்.
அந்த விழாவில் அவர் பேசியது: ‘‘குடியால் பல குடும்பங்கள் அழிந்துபோனதை நான் கண்டிருக்கிறேன். இந்த கதையை என்னிடம் தினகர் சொன்னபோது அதிலிருந்த உண்மைத்தன்மை என்னை வெகுவாக ஆட்கொண்டது.
வசனங்களும், வாழ்வும் , நெருக்கமான ஒரு உணர்வை தந்தது. தமிழ்சினிமாவில் அவசியமான நல்ல படங்களை தரவேண்டும் என்பது நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் விருப்பம். இன்னும் நல்ல படங்கள் , பொழுதுபோக்கோடு சமூகக்கருத்துள்ள படங்கள் உருவாக்குவோம். தமிழ்சினிமாவை மாற்றிய இயக்குனர் மிஷ்கின், வெற்றிமாறன், அமீர், லிங்குசாமி போன்றவர்கள் இந்த விழாவுக்கு வந்தது எங்களுக்கு பெரிய விஷயம். இவர்கள் படங்களை பார்த்து, இவர்கள் படங்களை விமர்சித்துதான் நாங்கள் சினிமாவுக்கு வந்தோம். குறிப்பாக, ஆடுகளம் பற்றி அதிகமாக விமர்சித்து இருக்கிறோம். அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை பற்றி அவ்வளவு பேசியிருக்கிறோம்.
நான், இயக்குனர் தினகர் போன்றவர்கள் கல்லுாரியில் ஒன்றாக படித்தோம். என்னுடன் படித்தவர்கள், சினிமாவுக்கு வர ஆசைப்பட்டார்கள். நான் அவர்களை உதவி இயக்குனர்களாக சேர்த்துக்கொண்டேன். அவர்களை அப்போது நண்பர்களாக பார்க்கவில்லை. உதவி இயக்குனர்களாக பார்த்தேன். பல சமயங்களில் கருணையற்று நடந்துகொண்டேன். அவர்களும் சிறப்பாக பணியாற்றினார்கள். நீலம் நிறுவனத்தில் படம் பண்ணுவது அவ்வளவு ஈஸி அல்ல. நிறைய விவாதித்து, கரெக் சன் பார்ப்போம். நல்ல படங்களை தர வேண்டும் என்று நினைப்போம். வெற்றி தோல்வியை மீறி, மக்களிடம் அது எப்படி செல்கிறது என்பதை உன்னிப்பாக பார்ப்போம். சில படங்கள் தோல்வி அடைந்தாலும் நிறைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், நீலத்தில் இருந்து வருகிற அனைத்து படங்களையும் பா.ரஞ்சித் படங்களாக பார்க்கிறார்கள்.கருணையற்று விமர்சனம் செய்கிறார்கள். நான் அது பற்றி கவலைப்படவில்லை. நீலம் படங்களை பற்றி பேசுவதையே, எதிர்ப்பதையே நல்லதாக நினைக்கிறேன்.
நானும் குடியால் மறைமுகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.நான் 12ம் வகுப்பு படிக்கும்போது தற்கொலை செய்யலாம்னு நினைத்தேன். காரணம், என் அப்பா. அவர் நல்லவர். குழந்தைகளை நன்றாக பார்த்துக்கொள்வாார். ஆனால், இந்த பழக்கத்தால் பல பிரச்னைகள். என் அம்மா ரொம்ப கஷ்டப்பட்டார். அழுது கொண்டே இருப்பார். குடி பாதிப்பு எவ்வளவு கொடுமையானது என்பதை நேரடியாக பார்த்தவன். அந்த சமயத்தில், என் அம்மா கஷ்டப்பட்டதை போல, என் மனைவி கஷ்டப்பட க்கூடாது. என் குழந்தைகள் கஷ்டப்படக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன். ஊரில் திருவிழா என்றால் மற்றவர்கள் சந்தோசமாக இருப்பார்கள், ஆனால், என் குடும்பம் வேறு மாதிரி இருக்கும். அப்பா நன்றாக வளர்த்தார். சாப்பாடு, படிப்பு, டிரஸ் விஷயத்தில் எங்களுக்கு கவலையில்லை.ஆனால், குடியால் பிரச்னைகள்.