அஜித் குமார் துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியில் 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தார். கடந்த 10ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையில் துபாயில் 24 ஹெச் சீரிஸ் கார் தொடர் நடைபெற்றது. இதில், அஜித் குமார் தலைமையிலான அணியும் கலந்து கொண்டார். இதற்காக கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னதாகவே துபாய் சென்ற அஜித் காரை தயார் செய்து பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். கார் ரேஸ் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக டிராக்கியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக கார் விபத்திற்குள்ளானது. எனினும் அஜித்திற்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து அடுத்த நாள் கார் ரேஸிலிருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டார். ஆனால், கொஞ்ச நேரத்திலேயே அவர் கார் ரேஸில் கலந்து கொள்ளும் வீடியோ வெளியானது.
இதைத் தொடர்ந்து ரேஸில் கலந்து கொண்டு 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தார். இதற்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்தனர். இந்த நிலையில் தான் துபாயில் நடைபெற்ற கார் ரேஸிற்கு பிறகு இப்போது போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெறும் கார் ரேஸிலும் அஜித் கலந்து கொண்டுள்ளார். போர்ச்சுக்கல்லில் நடைபெற்று வரும் தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரின்ட் கார் ரேஸிங் தொடரில் அஜித் கலந்து கொண்டுள்ளார். இதில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் அஜித் 4.653 கிமீ தூரத்தை 1.49.13 லேப் டைமிங்கில் நிறைவு செய்துள்ளார் என்று கார் ரேஸிங் அணி எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் எந்தப் படமும் வெளியாகாத நிலையில் அஜித் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர். ஆனால், 2025 ஆம் ஆண்டு முதல் அஜித் ரசிகர்கள் உற்சாகத்திலும் கொண்டாட்டத்திலும் இருக்கின்றனர். ஏற்கனவே துபாய் கார் ரேஸ் வெற்றியை கொண்டாடிய அஜித் ரசிகர்கள், இப்போது போர்ச்சுக்கல் கார் ரேஸில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அஜித் நடித்துள்ள விடாமுயற்சி வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித் நடித்த விடாமுயற்சி படத்தின் டிரைலர் வெளியானது. இதையடுத்து, இந்தப் படத்தில் இடம் பெற்ற பத்திக்கிச்சு என்ற பாடலின் லிரிக் வீடியோவும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.