கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். எத்தனையோ வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறேன். ஆனால் எனக்கு அங்கீகாரம் இல்லை ’’ என்று சுந்தர்.சி கூறியுள்ளார்.
மதகஜராஜா படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் சுந்தர்.சி பேசியதாவது…
நான் படங்களுக்கு சக்சஸ் மீட் வைத்தது கிடையாது. ஆனால் இந்த படம் அதை எல்லாவற்றையும் மீறிய ஒரு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. மற்ற படங்களை விட இது ஒரு ஸ்பெஷல். 13 வருடம் கழித்து இந்த படம் வருகிறது, என்ன பெரிதாக சாதித்து விடப்போகிறது என்று கூட திரையுலகில் சிலர் சொன்னார்கள். ஆனால் மக்களுக்கு இந்த படத்தின் மீது நம்பிக்கை இருந்தது.
இந்தப் படம் வெற்றி பெறும் என நான் நம்பினேன். நூற்றுக்கு 99 சதவீதம் பேர் படம் பார்த்துவிட்டு இது நன்றாக இருக்கிறது என்று சொன்னபோது என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அவர்களுக்கு என்னால் திருப்பிக் கொடுக்க முடிந்தது என் நன்றியும் சில சொட்டு கண்ணீரும் தான். இந்த படத்தில் நடித்த மணிவண்ணன், மனோபாலா, நெல்லை சிவா, செல்லத்துரை ஆகியோர் மறைந்துவிட்டனர். அவர்களை நினைத்துப் பார்க்கிறேன்.
அஞ்சலி, வரலட்சுமி உட்பட அனைவருக்கும் நன்றி. வரலட்சுமி கடைசி நேரத்தில்தான் இந்த படத்திற்குள் வந்தார். முதலில் வேறு கதாநாயகி நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் ஒரு வாரம் தள்ளித்தான் வர முடியும் என்கிற சூழல். முதல் நாள் திடீரென வரலட்சுமியை அழைத்து விஷயம் சொன்னதும் உடனே கிளம்பி வந்தார்.
கலகலப்பு, மதகஜராஜா என என்னுடைய இரண்டு சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்த ராசியான ஹீரோயின் அஞ்சலி. கார்த்திக், விஷால் போன்ற ஹீரோக்கள் என்னை முழுமூச்சாக நம்பி தங்களை ஒப்படைத்து விடுவார்கள். ஒரு கதாநாயகி அப்படி ஒப்படைப்பது என்பது சிரமம் தான். ஆனால் அஞ்சலி அப்படி இயக்குனரை நம்பி தன்னை ஒப்படைக்கும் நடிகை.
இந்த படத்தில் இடம்பெற்ற தொம்பைக்கு தொம்பை என்கிற பாடலை விஜய் ஆண்டனியை டார்ச்சர் செய்து ஐந்து நாட்கள் வேலை வாங்கி உருவாக்கினேன். ஆனால் பாடல் வெளியான சமயத்தில் அவ்வளவு வரவேற்பு பெறவில்லை என்று எனக்கு வருத்தம் இருந்தது. ஆனால் இப்போது பார்த்தால் அந்த பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகி உள்ளது.
வானமாமலை என்பவர் எழுதிய புத்தகத்திலிருந்து தூய தமிழ் வார்த்தைகளை எடுத்து இதில் பயன்படுத்தியிருந்தோம். அதேபோல சிக்குபுக்கு ரயிலு வண்டி பாடல் இதில் வந்ததே சுவாரசியமான விஷயம். அது வேறு படக்குழுவால் ஒதுக்கப்பட்டது. ஆனால், அற்புதமாக இருந்தது. இதை நான் பயன்படுத்திக் கொள்கிறேன் என்று வாங்கிக் கொண்டேன். இப்போது எல்லா திருவிழாவிலும் இந்தப்பாடல் ஒலிக்காத இடமே கிடையாது என்பது போல இவ்வளவு பெரிய ஹிட் ஆகிவிட்டது.
நான் எம்ஜிஆரின் மிக தீவிரமான ரசிகன். காலையில் கண்விழித்ததுமே ஏதோ ஒரு இடத்தில் அவரது புகைப்படமோ அல்லது போஸ்டரோ பார்த்தால் அல்லது அவரது பாடலை எங்கேயாவது கேட்டால் அன்றைய தினம் முழுவதும் சந்தோஷமாக இருக்கும். அப்படி ஒரு சென்டிமென்ட் எனக்கு இருக்கிறது. அவருடைய பெயரை இந்த படத்திற்கு சுருக்கமாக வைத்தோம். அதனால்தான் என்னவோ அவருடைய ஆசிர்வாதமும் கூடவே அதிர்ஷ்டமும் சேர்ந்து வந்துள்ளது. படம் வெற்றி
நான் இதுவரை எத்தனையோ வெற்றி படங்கள் கொடுத்து இருக்கிறேன். 30 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். கமர்ஷியல் படம், காமெடி படம் எடுப்பது எளிதல்ல. மக்களை சிரிக்க வைப்பது அவ்வளவு கஷ்டம். நிறைய உழைப்பு, திட்டமிடல் தேவைப்படும். அதை சரியாக செய்கிறேன். ஆனால், தமிழகத்தின் சிறந்த இயக்குனர் பட்டியலில், டாப் இயக்குனர் பட்டியலில் என் பெயர் வராது. கமர்ஷியல் இயக்குனர் என்றால், வேறு இடத்தில் வைத்து பார்க்கிறார்கள். எங்களை போன்றவர்களுக்கு அங்கீகாரம் இல்லை. ஆனாலும், நான் தொடர்ந்து கமர்ஷியல் படம் எடுப்பேன்.