பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்து போராடி வரும் மக்களை சந்திக்க வரும் 20-ம் தேதி பரந்தூர் செல்ல நடிகரும் தவெக தலைவருமான விஜய் திட்டமிட்டுள்ளார். அவருக்கு போலீஸார் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நாளுக்கு நாள் இட நெருக்கடி அதிகரித்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக, சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. இங்கு ₹32,704.92 கோடியில் விமான நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம், பரந்தூர் விமான நிலையத்திற்கான இட அனுமதி விண்ணப்பம் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தால் அனுப்பப்பட்டது. அந்த வகையில், பரந்தூரில் முன்மொழியப்பட்ட விமான நிலையத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
புதிய விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூரை சுற்றி 5,100 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. விமான நிலையம் அமைப்பதற்காக விவசாய நிலங்களை கைப்பற்ற கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராமம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களை பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பரந்தூர் பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களை வரும் 20-ம் தேதி சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 19 அல்லது 20-ம் தேதி விஜய் பரந்தூர் செல்ல அனுமதி கேட்ட நிலையில், 20-ம் தேதி பனையூர் செல்ல விஜய்க்கு போலீஸார் அனுமதி கொடுத்துள்ளனர். அத்துடன் பரந்தூர் செல்லும்போது விஜய் கடைபிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகளையும் போலீஸார் விதித்துள்ளனர்.
விஜய்க்கு போலீஸார் விதித்துள்ள விதிமுறைகள் வருமாறு…
காவல்துறை சொல்லும் இடத்தில்தான் மக்களை சந்திக்க வேண்டும்.
குறிப்பிட்ட வாகனங்கள்தான் வர வேண்டும்.
அதிக கூட்டம் கூட்டாமல் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில்தான் நபர்கள் வரவேண்டும்.
குறிப்பிட்ட நேரத்தில் மக்களை சந்தித்து விட்டு செல்ல வேண்டும்.
ஆகிய கட்டுப்பாடுகளை விஜய்க்கு போலீஸார் வித்துள்ளனர்.
இந்த கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பனையூர் செல்ல விஜய் திட்டமிட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.