பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை மும்பையில் அவரது வீட்டுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் கத்தியால் தாக்கியுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானும் அவரது மனைவி கரீனா கபூரும் இரு மகன்களுடன் மேற்கு பந்தராவில் இருக்கும் சத்குரு ஷரன் பில்டிங்கில் வசித்து வருகிறார்கள். பிரபலங்கள் அதிகமாக வசிக்கும் இந்த பகுதியில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு , சைஃப் அலிகான் வீட்டுக்குள் மர்ம் நபர் ஒருவர் நுழைந்துள்ளார். சைஃப் அலிகானின் வீட்டில் திருடும் நோக்கத்துடன் வீட்டில் வேலை செய்யும் பெண்மணியை கத்தியை வைத்து அந்த நபர் மிரட்டியிருக்கிறார். அந்தப் பெண்ணைக் காப்பாற்ற சைஃப் அலி கான் குறுக்கிட்டுள்ளார். அப்போது அந்த நபர் சைஃப் அலி கானை சரமாரியாக குத்திவிட்டு , அந்த இடத்தில் இருந்து தப்பியுள்ளார்.
மர்ம நபரின் தாக்குதால் சைஃப் அலிகானின் உடலில் 6 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அங்கு அறுவை சிகிச்ச்சை நடந்துள்ளது.
சைஃப் கானுக்கு வழங்கப்பட்டுள்ள சிகிச்சை குறித்து மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி நீரஜ் கூறும்போது, ”சைஃப் அலிகான் அதிகாலை 3.30 மணிக்கு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவரது உடலில் 6 காயங்கள் இருந்தன. கழுத்து பகுதியில் ஒரு காயம் இருந்தது. அதில் இரண்டு காயங்கள் மிகவும் ஆழமாகப் பட்டிருந்தது. அவருக்கு காலை 5.30 மணிக்கு நரம்பியல் நிபுணர் டாக்டர் நிதின் தலைமையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மருத்துவமனையில் சைஃப் அலிகான் உறவினர்கள் உடனிருந்து கவனித்துக்கொண்டனர். சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தில் சைஃப் அலிகான் வீட்டு வேலைக்காரர் ஒருவரும் லேசாக காயம் அடைந்தார். அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, , ”சைஃப் அலிகான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கத்திக்குத்து விழுந்ததா அல்லது திருடனை எதிர்த்து போராடியபோது காயம் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். குற்றப்பிரிவு போலீஸாரும் தனியாக விசாரித்து வருகின்றனர்” என்றார்
இந்தச் சம்பவத்தில் கரீனா கபூருக்கோ, சைஃப் அலி கானின் மகன்களுக்கோ எந்த அசாம்பாவிதமும் நடக்கவில்லை. குழந்தைகள் அறையில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சம்பவத்தின்போது, கரீனா கபூர் தன் தோழிகளுடன் இருந்ததாகவும், சைஃபும் குழந்தைகளும் மட்டுமே வீட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.