அதானி நிறுவனத்தின் மீது கடந்த 2022-ம் ஆண்டு குற்றம் சாட்டிய ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் திடீரென மூடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அதானி நிறுவனத்தின் பங்குகள் இன்று திடீர் ஏற்றம் கண்டன.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஹிண்டன்பர்க். இந்த நிறுவனம் உலகின் பெரும் நிறுவனங்களில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். இதன் அறிக்கைகள், மோசடிகளை அம்பலப்படுத்துவதிலும், முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது.
2022-ம் ஆண்டில் அதானி குழுமத்தின் மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகள் மற்றும் பங்கு விலை கையாளுதல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கையை வெளியிட்டதன் மூலம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் இந்தியாவில் பெரும் புகழ் பெற்றது. அதேவேளையில் இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் வன்மையாக கண்டித்து முற்றிலும் மறுத்தது.
இந்நிலையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் திடீரென மூடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தளத்தில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தை மூடுவதாக நேத்தன் ஆண்டர்சன் அறிவித்தார். “நாங்கள் ஆய்வு செய்து வந்த நிறுவனங்களின் பணிகளை முடித்த பிறகு நிறுவனத்தை மூட திட்டமிட்டோம்,” என்று அவர் கூறினார். கடைசியாக ஆய்வு செய்து வந்த போன்சி திட்டத்தின் ஆய்வறிக்கையை SEC-க்கு சமர்ப்பித்த நிலையில் இன்று நிறுவனத்தை மூடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“ஹிண்டன்பர்க் நிறுவனத்தை மூடுவதற்கான காரணம் எதுவுமில்லை. மிரட்டல், உடல்நலப் பாதிப்புகள் போன்ற எதுவுமில்லை. கடந்த ஆண்டு குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எங்கள் குழுவுடன் விவாதித்து இந்த முடிவை எடுத்துள்ளேன். இதனால், ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தை நிரந்தரமாக மூட முடிவுசெய்துள்ளேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.